தமிழக சட்டப்பேரவையில் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக – பாஜ இடையே காரசார வாக்குவாதம் நடந்தது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற கோரி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேசினர்.
வானதி சீனிவாசன் (பாஜ): இஸ்லாமிய சமூகத்தோடு பிற்படுத்தப்பட்ட மக்களும், பெண்களும் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காகவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: மதத்தின் அடையாளமாக கருதப்படும் வாரியத்தில் மற்றொரு மதத்தை சேர்ந்தவர்களை புகுத்துவது எந்தவகையில் நியாயம்?
வானதி சீனிவாசன் (பாஜ): வக்பு வாரிய சொத்துகளை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையிலேயே சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பயணித்து பல்வேறு சமூக மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு தான் அந்த பரிந்துரை வழங்கப்பட்டது.
அமைச்சர் ரகுபதி: நாடு முழுவதும் பெயரளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு ஆட்சேபனைகளை ஏற்காமல், ஆதரவாளர்கள் அளித்த பரிந்துரைகள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது.
வானதி சீனிவாசன்: ஜனநாயக முறைப்படி மக்கள் தேர்ந்தெடுத்த நீங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததைபோல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசும் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது.
அமைச்சர் ரகுபதி: அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு எந்தவித விவாதமுமின்றி தாங்களே தாக்கல் செய்து தாங்களே நிறைவேற்றிக் கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கூட்டுக்குழு கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராசா, எம்.எம்.அப்துல்லாவுக்கு பேச அனுமதி வழங்கவில்லை. ஆனால் இங்கு வானதி சீனிவாசன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். இந்த சட்டமன்றத்தில் உங்களை அனுமதிக்கிறோம். ஆனால் அங்கு எங்களை அவர்கள் பேசவே அனுமதிக்கவில்லை.
வானதி சீனிவாசன்: சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வரும் போது அதன் செயலாக்கத்தன்மையை யோசிக்க வேண்டும். மாநில அரசை போலவே மத்திய அரசுக்கும் அதிகாரம் உள்ளது.
சபாநாயகர் அப்பாவு: இந்த பேரவையில் கொண்டு வரப்பட்ட இருமொழிக் கொள்கை தொடர்பான தீர்மானத்தை தான் பாராளுமன்றமே ஏற்றது.
வானதி சீனிவாசன்: மத்திய அரசின் சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ வெளிநடப்பு செய்கிறது என்றார். தொடர்ந்து பாஜ உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
* பள்ளி நூலகங்களுக்கு தேவையான நூல்கள் எவ்வாறு கொள்முதல் செய்யப்படுகிறது? அமைச்சர் விளக்கம்
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பாபநாசம் எம்எல்ஏ எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக) பேசுகையில், ‘‘ஒருங்கிணைந்த கல்வி அதாவது, சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் பள்ளி நூலகங்களுக்கு நூல்களைக் கொள்முதல் செய்வதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றனவா? என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், எஸ்எஸ்ஏ மூலமாக நாங்கள் புத்தங்களைக் கொள்முதல் செய்து கொண்டிருக்கிறோம். தற்போது தமிழ்நாடு முதல்வர் வெளிப்படைத்தன்மையாக அந்த கொள்முதல் இருக்க வேண்டும் என்ற விதத்தில் தற்போது ஆன்லைன் மூலமாகவும் நாங்கள் அதைச் செய்து கொண்டிருக்கின்றோம். வருங்காலத்தில் எத்தனைப் புத்தகங்கள் தேவைப்படுகின்றதோ, அதுசார்ந்து உங்களுடைய கோரிக்கையை வைக்கும்போது அதை கொள்முதல் செய்து, அந்த நூலகத்திற்கு நம்மால் வழங்க முடியும்” என்றார்.
* சென்னிமலை கோயில் இடத்தில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம்: அமைச்சர் சாமிநாதன் தகவல்
தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் (திமுக) பேசுகையில், திருப்பூர் குமரனின் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. அது எந்த நிலையில் உள்ளது?’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் சுவாமிநாதன் பேசுகையில், திருப்பூர் குமரன் பிறந்த ஊரான சென்னிமலையில் மணிமண்டபம் அறிவிக்கப்பட்டது. முதலில் தேர்வு செய்யப்பட்ட இடம் சென்னிமலையில் இருந்து தூரமாக இருந்தது என மக்கள் கூறியதால், அறநிலையத்துறை அமைச்சரிடத்தில் முதல்வர் அதற்கான உத்தரவை பிறப்பித்து சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றார்.
* பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலை வீட்டுமனைப் பட்டா: சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மதுராந்தகம் கு.மரகதம் குமரவேல் (அதிமுக) பேசுகையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்ட சலுகை விலை வீட்டுமனைப் பட்டாவை அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மீண்டும் வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், “பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா கொடுப்பது பல்வேறு பகுதிகளில் ரத்து செய்தது பற்றி எங்களது கவனத்திற்கு வந்து சேரவில்லை.
அது சம்பந்தமாக, துறையினுடைய செயலாளரும், துறையினுடைய இயக்குநரும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அதற்குரிய நல்ல சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்துவோம்” என்றார்.
The post வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது பேரவையில் திமுக-பாஜ காரசார விவாதம் appeared first on Dinakaran.