புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்தும் வகையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பாஜ எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் 21 மக்களவை மற்றும் 10 மாநிலங்களவை எம்பிக்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
கடந்த 24ம் தேதி குழுவின் 35வது கூட்டம் நடந்த போது, கடும் அமளி ஏற்பட்டதால், 10 எதிர்க்கட்சி எம்பிக்கள் குழுவிலிருந்து ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த பரபரப்பான சூழலில், கூட்டுக்குழுவின் இறுதி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், சட்ட மசோதாவின் ஒவ்வொரு பிரிவாக எம்பிக்கள் முன்மொழிந்த திருத்தங்கள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. குழுவில் உள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சி எம்பிக்கள் சார்பில், மசோதாவில் உள்ள 44 பிரிவிலும் 100க்கும் மேற்பட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட்டன.
இவை கிட்டத்தட்ட முந்தைய சட்டத்தை உறுதிபடுத்தும் வகையில் இருந்தன. இந்த அத்தனை திருத்தங்களும் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததாக கூறி குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் நிராகரித்தார். அதே சமயம், பாஜ எம்பிக்கள் கொண்டு வந்த 14 பிரிவுகளில் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, வக்பு வாரிய சட்டதிருத்த மசோதா கூட்டுக்குழுவால் இறுதி செய்யப்பட்டு விட்டதாக குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் நேற்று அறிவித்தார்.
இக்குழுவின் அறிக்கை வரும் 29ம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். வரும் 31ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதில், மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் பாஜவுக்கு போதிய பலம் இருப்பதால் பட்ஜெட் முதல்கட்ட கூட்டத்தொடரிலேயே இச்சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகளின் அத்தனை திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டதால் இவ்விவகாரம் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* உச்ச நீதிமன்றம் செல்வோம்
திமுக எம்பி ஆ.ராசா கூறுகையில், ‘‘ ஏப்ரல் 4ம் தேதி வரை காலம் உள்ள நிலையில், தற்போது அவசர அவசரமாக சட்டத்தை இறுதி செய்ய காரணம் என்ன என்பது புரியவில்லை, குறிப்பாக டெல்லி தேர்தலுக்கு பயன்படுத்தவே இந்த சட்டத்திருத்தத்தை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த அவசர அவசரமாக சட்ட வரைவை இறுதி செய்ய அறிவுறுத்துகின்றனர். இஸ்லாமியர்களின் 60சதவீத சொத்துக்களை பறிக்கவே அவசரமாக மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுவை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது.
முன்கூட்டியே அறிக்கையை தயார் செய்ததால் தான் எதிர்க்கட்சிகளின் எந்த திருத்தத்தையும் ஏற்கவில்லை. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் அதை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் நிச்சயம் வழக்கு தொடரும்’’ என்றார். விதிமீறல், அத்துமீறல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கூறுகையில், ‘‘எல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு விட்டது.
நாங்கள் எதுவும் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. எந்த விதிகளும் நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. திருத்தங்களை ஒவ்வொரு உட்பிரிவாக விவாதிக்க விரும்பினோம், ஆனால் அனுமதிக்கப்படவில்லை. குழு தலைவர் திருத்தங்களை முன்மொழிந்து, பின்னர் எங்கள் கருத்துக்களைக் கேட்காமல் அவற்றை அறிவித்தார். இது ஜனநாயகத்திற்கு ஒரு மோசமான நாள்’’ என்றார்.
முஸ்லிம் அல்லாத 4 பேர் வக்பு வாரிய உறுப்பினர்
* முந்தைய சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத 2 நபர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இது கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது கூட்டுக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மசோதாவில் 4 நபர்கள் கூட முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்கலாம் என மாற்றப்பட்டுள்ளது. இது மேலும் எதிர்ப்பை ஏற்படுத்தக் கூடியது.
* விதவைகள், அநாதைகளுக்கான நலத்திட்டங்களை வக்பு வாரியங்களே முடிவெடுக்கலாம் என மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
* தற்போது பயன்பாட்டில் உள்ள வக்பு சொத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இல்லாவிட்டாலோ, அரசு நிலத்தில் இல்லாவிட்டாலோ அவை வக்பு சொத்துக்களாகவே தொடரும். ஆனால் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பாக அந்த சொத்துக்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகள் இஸ்லாத்தை கடைப்பிடிக்கும் ஒருவர் மட்டுமே இஸ்லாம் சட்டத்தின் கீழ் மத அல்லது தொண்டு பணிக்காக சொத்துக்களை வக்பு வாரியத்திற்கு தானமாக வழங்க முடியும். அவ்வாறு சொத்துக்களை வழங்கும் நபர் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதை நிரூபிக்க வேண்டும் என திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
* இந்த திருத்தங்கள் பரிந்துரை மட்டுமே. இவற்றை ஏற்பது குறித்து ஒன்றிய அரசே முடிவு செய்யும் என குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறி உள்ளார்.
The post வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இறுதி செய்தது நாடாளுமன்ற கூட்டுக்குழு: எதிர்க்கட்சிகளின் அனைத்து திருத்தமும் நிராகரிப்பு appeared first on Dinakaran.