டாக்கா: வங்கதேசத்தில் மூத்த பெண் பத்திரிகையாளர் முன்னி சாஹாவை இந்தியாவின் உளவாளி எனக் கூறி கும்பல் ஒன்று நேற்று (சனிக்கிழமை) முற்றுகையிட்டது. பின்பு அவர் போலீஸாரால் மீட்கப்பட்டார்.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் கர்வான் பஜார் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தான் வேலைபார்க்கும் தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து முன்னி சாஹா வெளியேறிய போது கும்பல் ஒன்று அவரைச் சூழ்ந்து முற்றுகையிட்டது. சாஹா ஒரு இந்திய முகவர் என்றும் ஆகஸ்ட் மாதம் நடந்த மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதாரவாளர் என்றும் குற்றம்சாட்டியது.