சென்னை: “தமிழக அரசு உடனடியாக அந்நிய நாட்டில் இருந்து தமிழகத்தில் ஊடுருபவர்களுக்கு போலி ஆதார் கார்டு எடுத்து தரும் ஏஜெண்டுகளை கண்காணித்து உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஊடுருவல்காரர்களைப் பிடிக்க தமிழக அரசும், காவல் துறையும் இணைந்து சிறப்பு தனி பிரிவை அமைக்க வேண்டும்,” என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேச இஸ்லாமியர்கள் அசாம் – திரிபுரா எல்லை வழியாக தமிழகத்தில் ஊடுருவி வருகின்றனர் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார். தொடர்ந்து இதே கருத்தை பல்வேறு முறை வலியுறுத்தி வந்த அவர், இம்முறை ஜவுளி துறையில் அதிகமாக வேலை செய்யும் நோக்கோடு தமிழகத்தில் ஊடுருவுகின்றனர் எனவும், போலி ஆதார் கார்டுகளின் மூலமாக அவர்கள் இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர் எனவும் எச்சரித்துள்ளார்.