சென்னை: வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி, வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தி திருப்பி, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி மட்டும் கட்டி அதே தினத்தில் மறு அடகு வைக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவர்கள் முழு பணத்தையும் புரட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நகைகளை திருப்பிய மறுநாள் தான் மீண்டும் நகைகளை மறு ஈடு வைத்து பணம் பெற முடியும். ரிசர்வ் வங்கியின் இந்த விதிகள் ஏழை எளிய மக்களுக்கும் குறிப்பாக சிறு குறு விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோருக்கு அதிக பாதிப்புகளையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. வட்டி செலுத்துவதன் மூலம் நகைகளை மீண்டும் அடகு வைக்கும் வாய்ப்பு மக்களுக்கு அதிக பயனுள்ளதாக இருந்தது.
ஆனால் தற்போது நகை கடனுக்கான அசல் வட்டி முழுவதையும் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் வங்கிகளின் நகை கடனை நம்பி உள்ளோர் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு பொதுமக்கள் நகை கடன் பெறுவதற்கு புதிய வழிகாட்டுதல் உத்தரவை திரும்பப் பெற்று ,பழைய விதிமுறைகளையே வங்கிகள் பின்பற்ற ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
The post வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப பெறுக: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.