புதுக்கோட்டை: வடகாடு கிராமத்தில் இரு சமூகத்தினர் மோதல் தொடர்பான விசாரணை அறிக்கை 2 நாளில்தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஆணைய இயக்குனர் ரவிவர்மன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த 5ம் தேதி இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் குடிசை மற்றும் இருசக்கர வாகனம், கார் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக இதுவரை இரண்டு சமூகத்தைச் சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோதலில் காயமடைந்த 20 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய இயக்குனர் ரவிவர்மன் மற்றும் அதிகாரிகள் வடகாடு கிராமத்திற்கு நேற்று சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரணை நடத்தினர். இதன் பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கைதி வார்டில் சிகிச்சை பெற்று வரும் ஆதிதிராவிடர் மக்களை சந்தித்து விசாரணை நடத்தினார். இதன்பின் இயக்குனர் ரவிவர்மன் நிருபர்களிடம் கூறும்போது, வடகாடு பிரச்னை தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அறிக்கை 2 நாளில் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தலைமையகத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என்றார்.
The post வடகாட்டில் இரு சமூகத்தினர் மோதல்; விசாரணை அறிக்கை 2 நாளில் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும்: எஸ்சி, எஸ்டி நல ஆணைய இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.