தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வட கொரிய நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று அலை அலையாகப் பரவி வரும் நிலையில், இந்த நெருக்கடியைக் கையாளும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.
சுகாதாரத் துறை அலுவலர்களை கடுமையாக விமர்சித்த வட கொரியத் தலைவர் கிம் ஜோங் – உன் மருந்துகளை விநியோகிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் 10 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை “காய்ச்சல்” என்று மட்டுமே வட கொரிய அரசு ஊடகம் குறிப்பிடுகிறது.
சுமார் 50 பேர் இறந்துள்ளனர். ஆனால், கோவிட்டால் இறந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இவர்களில் எத்தனை பேருக்கு கோவிட் பரிசோதனையில் பாசிடிவ் வந்துள்ளது என்று தெரியவில்லை.
கோவிட் 19 வந்துள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை வாய்ப்புகள் வட கொரியாவில் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளன. எனவே, சிலருக்கே கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிக பாதிப்புக்கு காரணம் என்ன?
தடுப்பூசி போடப்படாததாலும், மிகவும் பின் தங்கிய சுகாதாரக் கட்டமைப்பு காரணமாகவும், வட கொரிய மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். உலகின் பிற பகுதிகளில் இருந்து பெரிதும் துண்டிக்கப்பட்டு வாழும் இந்த நாட்டில் தேசம் தழுவிய பொது முடக்கம் அமலில் உள்ளது.
கடந்த வார இறுதியில் அவசர அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தை கூட்டிய நாட்டுத் தலைவர் கிம், தேசிய மருந்துக் கையிருப்பில் இருந்து சரியான முறையில் மக்களுக்கு மருந்துகளை விநியோகிக்கவில்லை என்று அதிகாரிகளை விமர்சித்ததாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
“தலைநகர் பியோங்யாங்கில் மருந்து விநியோகத்தை உடனடியாக ஸ்திரப்படுத்துவதற்கு, ராணுவத்தின் ஆற்றல்மிக்க” மருத்துவப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
தங்கள் நாட்டில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல் முதலாக கடந்த வாரம் அறிவித்தது வட கொரியா. ஆனால், நீண்ட காலமாகவே அந்நாட்டில் வைரஸ் தொற்று இருந்து வந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் வல்லுநர்கள்.