அண்மையில் சென்னை கோயம்பேடு பணிமனையிலிருந்து தமிழக அரசுப் பேருந்தை ஒடிஷா மாநில இளைஞர் கடத்திச் சென்றிருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வேலை தேடி தமிழகத்துக்கு வரும் வட மாநிலத்தவரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பது ஒருபுறம் இருக்க, அவர்களில் சிலர் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொறுப்பும் அரசுக்கு இருப்பதை இத்தகைய சம்பவங்கள் உணர்த்துகின்றன.
சென்னை – திருப்பதி செல்வதற்கான ஓர் அரசுப் பேருந்து, கோயம்பேடு பணிமனையில் திருடுபோனதாக செப்டம்பர் 11 அன்று சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிப்பதிவுகளைக் காவல் துறையினர் ஆய்வுசெய்ததில், ஒருவர் பேருந்தைத் திருடி ஆந்திர மாநிலத்துக்கான வழித்தடத்தில் ஓட்டிச் செல்வது தெரியவந்தது.