சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத் துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு சட்டப்பேரவையில் அமைச்சர் பி.மூர்த்தி பதிலளித்து பேசினார்.
அமைச்சர் பேசியதாவது:
தமிழக வரலாற்றில் புதிய சாதனை படைத்து வரும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநில அரசின் வரி வருவாயில் வணிகவரித் துறை மூலமாக 71.6 சதவிகிதமும், பதிவுத்துறை மூலமாக 15.4 சதவிகிதமும் பெறப்பட்டு, அரசிற்கு வரும் மொத்த வருவாயில் 87 சதவிகிதம் வருவாயை ஈட்டித் தரும் பெருமைமிகு துறைகளாக வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை உள்ளன.
இதுவரை இல்லாத அளவு இது என்று வாய் வார்த்தையாக நான் சொல்லவில்லை. புள்ளி விபரங்களின் அடிப்படையில் தான் சொல்கிறேன். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தில் வணிக வரித் துறை மொத்தமாக ஈட்டியுள்ள வரி வருவாய் 6 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை வணிகவரித் துறை ஈட்டியுள்ளது.
கடந்த ஆட்சியில் 10 ஆண்டு காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வரி வருவாயில் 74 சதவிகித வருவாயை கடந்த 4 ஆண்டுகளில் கழக அரசு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மீதமுள்ள வருவாய் இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் வணிகவரித் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் முன்னெடுத்துள்ளது. அதே போன்று பதிவுத் துறையில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் 88 ஆயிரத்து 844 கோடி ரூபாய் ஆகும். ஆனால் இந்த 4 ஆண்டு கால கழக ஆட்சியில் மட்டும் இதுவரை 72 ஆயிரத்து 4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பதிவுத் துறையில் ஈட்டப்பட்ட மொத்த வருவாயை விட கழக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் கூடுதலாக வருவாய் ஈட்டுவதற்கு பதிவுத் துறையானது பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறாக, கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 4 ஆண்டுகளில் வணிகவரித் துறையும், பதிவுத் துறையும் சேர்ந்து மொத்தமாக 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன. இவ்விரு துறைகளால் வசூலிக்கப்படும் இந்த வருவாயின் பங்களிப்பானது, தமிழ்நாடு அரசு புதுமையான பல திட்டங்களை செயல்படுத்தி, மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் ஆதாரமாக உள்ளது. வரலாற்றுச் சாதனையான இந்த வெற்றியை முதலமைச்சருக்கு பெருமையோடு அர்ப்பணிக்கிறோம்.
வணிகவரித் துறை
முதலமைச்சர் தலைமையிலான கழக அரசு பொறுப்பேற்கும் போது 2020-21-ஆம் ஆண்டில் இழப்பீட்டுத் தொகை இல்லாமல் 85 ஆயிரத்து 867 கோடி ரூபாயாக இருந்த வணிகவரித் துறையின் வரி வருவாய், துறையின் தொடர் முயற்சிகளால் 2024-25-ஆம் நிதியாண்டில், 1 லட்சத்து 38 ஆயிரத்து 120 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 2020-21-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 52 ஆயிரத்து 252 கோடி ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. வரி வசூலில் முதன்மைத் துறையாக இருந்த போதிலும் வணிகவரித் துறையின் நிர்வாக செலவினமானது, இத்துறையின் வருவாயில் அரை சதவிகிதத்திற்கும் குறைவாகவே தொடர்ந்து இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2024-2025-ஆம் ஆண்டில் 0.47 சதவிகிதமாக உள்ளது.
கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் வணிகவரித் துறையில் ஏழு நிர்வாக கோட்டங்களும், ஆறு நுண்ணறிவு கோட்டங்களும், 13 வணிகவரி துணை ஆணையர் அலுவலகங்களும் உருவாக்கப்பட்டது. அதிக பணியாளர்களை துறையின் உயர்பணிகளில் ஈடுபடுத்தும் வகையில், 6 கூடுதல் ஆணையர்கள், 23 இணை ஆணையர்கள், 76 துணை ஆணையர்கள், 96 உதவிஆணையர்கள், 296 மாநில வரி அலுவலர்கள் மற்றும் 975 துணை மாநில வரி அலுவலர்கள் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நுண்ணறிவுப் பிரிவில் சுற்றும் படைகளின் எண்ணிக்கை 55-இல் இருந்து 100-ஆகவும், ஆய்வு குழுக்களின் எண்ணிக்கையை 52-இல் இருந்து 112-ஆகவும் உயர்த்தப்பட்டது. இவ்வாறு துறையில் நான்காண்டுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு முயற்சிகளின் வாயிலாக இக்கூடுதல் வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட புதிய கோட்டங்களுக்கு தேவையான பணியாளர்கள், கட்டடங்கள், வாகன வசதி உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகளை வழங்குவதற்கும், ஏற்கெனவே உள்ள கோட்டங்களில் பழமையான மற்றும் வாடகை கட்டடங்களில் செயல்படும் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும், பழைய கட்டடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், துறையின் வருவாய் பெருக்கத்திற்கு தேவையான மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பணிகளுக்கும் இந்த நிதியாண்டில் வணிகவரித் துறைக்கு 350 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பதிவுச் சான்று, திருப்புத் தொகை, வரி விவர அறிக்கைகள் தாக்கல் செய்வதை கண்காணித்தல், வரி விவர அறிக்கைகளின் கூர்ந்தாய்வு, வரிவிதிப்பு மற்றும் வருவாய் நிலுவைகளை வசூல் செய்தல் போன்ற முக்கிய பணிகளில் வணிகவரித் துறை அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது.
நுண்ணறிவுப் பிரிவின் ஆய்வுக் குழுக்கள் மற்றும் சுற்றும் படைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், புதியதாக வரி ஆய்வுக் குழு மற்றும் தணிக்கைக் குழுக்களை உருவாக்குதல், வரி வசூல் ஆய்வாளர்களின் பணித்தரம் உயர்த்துதல், தரவு பகுப்பாய்வு தீர்வு சேவைகளை வழங்குவதற்காக ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை (IIT) ஈடுபடுத்துதல், புதியதாக பதிவு பெற்ற வரிசெலுத்துவோர்க்கு வரவேற்பு கடிதம் அனுப்புதல் மற்றும் தெருத் தணிக்கை மேற்கொள்ளுதல் போன்ற நல்ல பல திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதன் பயனாக வணிகவரித்துறையில் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டது.
2024-25-ஆம் ஆண்டில், மொத்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) வருவாய் வசூலில் தேசிய வளர்ச்சி விகிதம் 11.40 சதவிகிதமாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதை விட உயர்வாக 15.22 சதவிகிதமாகவும், ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (IGST) வருவாய் வசூலில் தேசிய வளர்ச்சி விகிதம் 13.49 சதவிகிதமாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதை விட உயர்வாக 19.33 சதவிகிதமாகவும், மொத்த மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (SGST) வருவாய் வசூலில், தேசிய வளர்ச்சி விகிதம் 9.60 சதவிகிதமாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதை விட உயர்வாக 12.75 சதவிகிதமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது மிகவும் உற்று நோக்க வேண்டிய குறிப்பிடத்தக்க சாதனை ஆகும்.
மேலும், 2024-25-ஆம் ஆண்டில், மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் மாநில வரம்பிற்குள்ளான வரி செலுத்துவோர் தாக்கல் செய்துள்ள மாதாந்திர வரி விவர அறிக்கைகளில் செலுத்திய வரித்தொகை மட்டுமல்லாமல், மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மற்றும் ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரித் தீர்வின் மூலம் 6,741.77 கோடி ரூபாய் கூடுதலாக ஈட்டப்பட்டு, 11.87 சதவிகிதம் வருவாய் பங்களிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திற்கு சேரவேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரித்தீர்வையை (IGST settlement) வரி ஆய்வுக் குழு கண்காணிக்கிறது. இக்குழு மேற்கொண்ட ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரித்தீர்வின் பகுப்பாய்வு வாயிலாக, 2024-25-ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரித் தீர்வு அதிகரித்து நமது மாநிலத்திற்கு 4,036.85 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
வணிக வரித்துறை மூலம் கூடுதலாக வருவாய் ஈட்டவும், வருவாய் வளர்ச்சியை மேம்படுத்தவும், வருவாய் இழப்பினை ஆய்வு செய்யவும், ஐதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரும் தரவுகளின் பகுப்பாய்வு தீர்வு சேவைகளை 07.12.2023 முதல் மூன்றாண்டுகளுக்கு வணிகவரித் துறை பயன்படுத்துவதற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளப்பட்டு, பயன்பாட்டு சேவை வழங்குநராக 13.47 கோடி ரூபாய் செலவில் அந்நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 2018-19, 2019-20, 2020-21 ஆகிய வரி விதிப்பு ஆண்டுகளுக்கான வரி விவர அறிக்கைகள், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டங்களின் கீழ் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு 31.12.2023 முதல் 31.3.2025 வரையிலான 15 மாத காலத்தில் 4,809.46 கோடி ரூபாய் வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
நுண்ணறிவுப் பிரிவின் ஆய்வு நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்தியதன் விளைவாக, 2023-24-ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட 1,095.93 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் 2024-25-ஆம் ஆண்டில் ஆய்வுக் குழுக்களினால் வசூலிக்கப்பட்ட வருவாயானது 2,867.83 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சரக்குகள் வழங்காமல், விலைப் பட்டியல் மட்டும் வழங்கிய போலி பட்டியல் தயாரிப்போர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கெதிராக நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகிறது. போலி பட்டியல் தயாரிப்பவர்களுக்கு எதிராக 2024-25-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மாநிலம் தழுவிய மற்றும் நாடு தழுவிய கணக்கெடுப்பின்போது 3,014.18 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி வரவு கொண்ட 1430 பதிவு பெற்ற நபர்கள் முகவரியில் செயல்படாதவர்களாக கண்டறியப்பட்டு, 1075 போலி வணிகர்களின் பதிவுச் சான்று இரத்து செய்யப்பட்டும், 2,837.50 கோடி ரூபாய் அபராதத்தொகை விதிக்கப்பட்டும் மேல்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், 12.46 கோடி ரூபாய் அளவிலான உள்ளீட்டு வரி வரவினை மோசடியாக பெற்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
சரக்கு வாகன சோதனை மற்றும் மின்னணு வழிப் பட்டியல் சரிபார்ப்புக்காக, சுற்றும்படை அலுவலர்களுக்கு வாகனங்கள் மற்றும் தேவையான உபகரணங்களை அளித்ததன் விளைவாக, கழக அரசு பொறுப்பேற்ற போது 2020-21-ஆம் ஆண்டில் 11.69 கோடி ரூபாயாக இருந்த சுற்றும்படையின் வருவாய், 2021-22-ஆம் ஆண்டில் 73.22 கோடி ரூபாயாகவும், 2022-23-ஆம் ஆண்டில் 222.49 கோடி ரூபாயாகவும், 2023-24-ஆம் ஆண்டில் 238.94 கோடி ரூபாயாகவும், 2024-25-ஆம் ஆண்டில் 251.98 கோடி ரூபாயாகவும் உயர்ந்தது. கடந்த 4 ஆண்டுகளில் சுற்றும் படைகளின் மூலம் மட்டும் 786.63 கோடி ரூபாய் வருவாயாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டங்கள் மற்றும் முந்தைய வரிச் சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் தணிக்கை நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி 60 தணிக்கை குழுக்கள் பணியாற்றி வருகின்றன. இத்தணிக்கைக் குழுக்களின் மேம்படுத்தப்பட்ட பணித் திறனின் விளைவாக, 530.93 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024-25-ஆம் ஆண்டில், நிலுவைகளை வசூல் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளால், மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவையாக 1,680.21 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவையாக 188.53 கோடி ரூபாயும், முந்தைய சட்டங்களின் நிலுவையாக 124.23 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டன.
ஏப்ரல் 2024 முதல் புதியதாக பதிவு பெற்ற வரி செலுத்துவோருடன் நல்லுறவை வளர்க்கும் விதமாக அவர்களுக்கு வரவேற்பு கடிதங்கள் அனுப்பும் நடைமுறை ஜூலை 2024 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறை மூலம் முகவரியில் செயல்படாத வரி செலுத்துவோர் மற்றும் போலி பட்டியல் தயாரிப்போர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் பதிவுச் சான்றுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பெற்ற உள்ளீட்டு வரி வரவினை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முகவரியில் செயல்படாத பதிவுபெற்ற நபர்கள் மற்றும் பதிவு பெறாத நபர்களை அடையாளம் காணும் பொருட்டு, ஆகஸ்ட் 2024 முதல் தெரு தணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்படுவதோடு, அவர்கள் வாயிலாக கூடுதல் வருவாயும் கிடைத்து வருகிறது. வணிக இடங்களை சரி பார்க்கும் போது தரவுகளை பெறுவதற்கு ஏதுவாகவும், தெருத் தணிக்கையை முறையான வகையில் நடத்திடவும், “அரண்” (ARAN) என்ற ஒரு கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
- பதிவு பெற்ற வணிக இடத்தில் உள்ள வரிசெலுத்துவோர், பதிவு பெறாத இடம் அல்லது கூடுதல் இடத்தில் வணிகம் செய்யும் வரி செலுத்துவோர், தவறான நிர்வாக வரம்பின் கீழ் இணைக்கப்பட்ட வரி செலுத்துவோர், போலி பட்டியல் தயாரிப்போர் ஆகியோரை அடையாளம் காண இந்த செயலி உதவுகிறது.
வரி செலுத்துவோர் எளிய முறையில் வணிகம் செய்வதை வணிகவரித் துறை ஊக்குவிக்கும் வண்ணம், சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ், பதிவுச் சான்று, அறிக்கைகள் தாக்கல் செய்தல், வரி செலுத்துதல், திருப்புத்தொகை பெறுதல் போன்ற வரி செலுத்துவோர் தொடர்பான பலவகையான வணிக நடவடிக்கைகளை இணைய வழியாகவே மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்தும் முறையினை எளிதாக்கும் வண்ணம், ஒன்றிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மற்றும் பற்று/வரவு அட்டைகள் மூலம் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினை செலுத்தும் முறை 07.11.2024 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இணையத்தின் பின்புல அலுவலக மென்பொருள் பயன்பாடு மாதிரி-2 அமைப்பினை 2022-ஆம் ஆண்டில் வணிகவரித் துறை ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், வருவாய் வசூலை மேம்படுத்திடவும், துறையின் அலுவலர்களுக்கு உதவிடவும், தமிழ்நாடு மின்னணுவியல் நிறுவனம் (ELCOT) மற்றும் தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையின் துணையுடன் முழுமையான தீர்வு திட்டம் 2.0 செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, துறை அலுவலர்களின் பணித்திறனை கண்காணிக்கும் பொருட்டு, ஐதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் மென்பொருள் தொகுப்புகளால் உருவாக்கப்படுகின்ற பல்வேறு மேம்படுத்தப்பட்ட மேலாண்மை தகவல் அறிக்கைகள், முழுமையான தீர்வு திட்டம் 2.0-வில் உட்புகுத்தப்பட்டுள்ளது.
வணிகர்களிடம் கனிவான அணுகுமுறையைக் கடைபிடித்து, அவர்களின் பல்வேறு குறைகளுக்கு தீர்வு கண்டு, மேன்மையான வரி நிர்வாகத்தை உறுதி செய்வதையே தலையாய கொள்கையாக கொண்டுள்ள வணிகவரித் துறை 2025-2026-ஆம் ஆண்டிலும், வணிகர் நலனை கருத்தில் கொண்டு அரசுக்கு வருவாயை ஈட்டுவதிலும் உரிய பங்களிப்பை தந்து சிறப்பாக செயல்படும் என்ற உறுதியை இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
வணிகவரித் துறையில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்து துறையின் வருவாய் பெருக்கத்திற்காக பெரிதும் உறுதுணையாக இருக்கும் வணிகவரித் துறை ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன் IAS அவர்களுக்கும், துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிவுத்துறை
பத்திரப் பதிவுத் துறையானது, அரசுக்கு வரும் மொத்த வருவாயில் 15.4 சதவிகிதத்தை அளித்து, வருவாய் ஈட்டும் துறைகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். திராவிட மாடல் ஆட்சியில் மக்களின் போற்றதலுக்குரிய நமது முதலமைச்சர் அவர்களால் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களுக்கு தேவையான நிதியை அளிப்பதில் பதிவுத் துறையும் தனது பங்கினை அளித்து வருகிறது. கழக அரசு பொறுப்பேற்ற போது, 2020-21 ஆம் நிதியாண்டில் 10 ஆயிரத்து 643 கோடி ரூபாயாக இருந்த பதிவு துறையின் வருவாய் தற்போது இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்து இந்த நிதியாண்டில் 21 ஆயிரத்து 968 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கழக அரசு பொறுப்பேற்ற பின்பு நான்காண்டுகளில் பதிவுத் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக இக்கூடுதல் வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு வருவாய் பெற்றுத் தருவதில் இரண்டாவது துறையாக உள்ள பதிவுத் துறையின் நிர்வாக செலவினமானது, 2024-25-ஆம் நிதியாண்டில் துறையின் மொத்த வருவாயில் 2 சதவிகிதமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஏழை எளிய மக்களுக்கு பதிவுத் துறையின் சேவைகள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கியதற்கு இணங்க, அதனை நிறைவேற்றிட பதிவுத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைவதற்காகவும் இந்த அரசால் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த திராவிட மாடல் ஆட்சியானது அனைத்து மக்களுக்கும் நன்மை தரும் ஆட்சியாக இருந்தாலும், குறிப்பாக பெண்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த வரிசையில் பத்திரப் பதிவுத் துறையில் மகளிருக்கான முத்திரைத் திட்டமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது…..
பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ரூபாய் 10 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்களுக்கும், பதிவுக் கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும் என்பது ஆகும். பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு என்று சட்டம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
அவ்வாறு பெண்கள் சொத்துரிமை பெற்றால் அந்த சொத்துக்கு பதிவுக் கட்டணத்தில் சலுகை என்று அறிவித்து மகளிரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறார் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அதனால் தான் தமிழ்நாட்டின் பெண்கள் அவரை அப்பாவாகவும், சகோதரனாகவும் பார்க்கிறார்கள். பணிப்பளு மிகுந்த அலுவலகங்களை பிரிக்கும் பொருட்டு சார்பதிவாளர் அலுவலகங்களின் எல்லைகள் சீரமைக்கப்பட்டு கடந்த நிதி ஆண்டில் மட்டும் தஞ்சாவூர் பதிவு மாவட்டம் அம்மாபேட்டை, விருதுநகர் பதிவு மாவட்டம் எம்.ரெட்டிபட்டி, சேலம் மேற்கு பதிவு மாவட்டம் காடையாம்பட்டி, கிருஷ்ணகிரி பதிவு மாவட்டம் பாகலூர் மற்றும் திருவள்ளூர் பதிவு மாவட்டம் எண்-2 இணை சார்பதிவாளர் அலுவலகம் என இதுவரை 5 புதிய அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
வடசென்னை பதிவு மாவட்டம் கொளத்தூர், திருப்பூர் பதிவு மாவட்டம் பொங்கலூர், தாம்பரம் பதிவு மாவட்டம் வண்டலூர், தென்சென்னை பதிவு மாவட்டம் சோழிங்கநல்லூர், கோவை தெற்கு பதிவு மாவட்டம் கருமத்தம்பட்டி, செங்கல்பட்டு பதிவு மாவட்டம் நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் என 7 புதிய அலுவலகங்கள் தொடங்கப்பட்டு, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளன.
பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் அவர்களின் வசதிக்காக
அந்தந்த சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள்ளேயே அலுவலக கட்டடம் அமையும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான கழக அரசு பொறுப்பேற்றது முதல் இது நாள் வரை 128 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 43 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பொதுமக்களின் பயன்பாட்டில்உள்ளன.3 அலுவலகங்களுக்கு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. 48 அலுவலகங்களுக்கான கட்டுமானப் பணிகள் தற்போது பல்வேறு நிலையில் நடைபெற்று வருகின்றன. 12 அலுவலகங்களுக்கான பணி ஒப்பந்தப் புள்ளி நிலையில் உள்ளன. 22 அலுவலகங்களுக்கான பணி தொடக்க நிலையில் உள்ளன.
பதிவுத்துறைக்கு சொந்தமான 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன கட்டடம் ஒன்று சென்னை ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ளது. இந்த கட்டடம் 1864- ஆம் ஆண்டு இந்தோ சராசனிக் கட்டட கலை நயத்துடன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கதாகும். வலுவிழந்த நிலையில் இருந்த இந்த புராதானக் கட்டடத்தை பழமை மாறாமல் ரூபாய் 9.85 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி 10-3-2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் சென்னை வடக்கு மாவட்டப்பதிவாளர் அலுவலகம், மாவட்டப்பதிவாளர் தணிக்கை அலுவலகம், வடசென்னை எண்-1 இணை சார்பதிவாளர் அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவை செயல்படுகின்றன.
பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் சேவைகள் அளிக்கும் வகையில் அடையாறு சார்பதிவாளர் அலுவலகம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அமருவதற்கு வசதியாக குளிரூட்டப்பட்ட அறை, சிறந்த இருக்கை வசதி, வைஃபை (wi-fi) வசதி போன்ற நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற வசதிகள் இந்த வருடம் 66 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படுத்துவதற்கும், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான கட்டடங்கள் மற்றும் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வரும் பதிவு அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும், அதிக ஆவணங்கள் பதிவாகும் சார்பதிவாளர் அலுவலகங்களின் பணிப்பளுவை குறைத்து, பொதுமக்களுக்கு விரைவான சேவையை அளிக்கும் வகையில் தென் சென்னை பதிவு மாவட்டம் குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தை மூன்றாக பிரித்தும், கோவை வடக்கு பதிவு மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தை இரண்டாக பிரித்தும், தர்மபுரி பதிவு மாவட்டம் பாப்பாரப்பட்டி, திருவண்ணாமலை பதிவு மாவட்டம், ஜமுனாமரத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டம் வாணாபுரம் ஆகிய இடங்களில் புதிய அலுவலகங்களை உருவாக்கவும், மேலும், பதிவுத் துறைக்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்புகளை வழங்குவதற்கு இந்த நிதியாண்டில் பதிவுத் துறைக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மேலும், திண்டுக்கல் பதிவு மாவட்டம் கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பாச்சலூர் கிராமத்தினை பிரித்து பழனி பதிவு மாவட்டம், சத்திரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வருவாய் ஈட்டுவதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறதோ அதே அளவு பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதிலும் பதிவுத்துறை கவனம் செலுத்தி வருகிறது. பதிவு செய்த நாளன்றே ஆவணங்கள் பொதுமக்களுக்கு திரும்ப வழங்கப்படுகின்றன.சென்ற நிதியாண்டில் பதிவான ஆவணங்களில் 89 சதவிகிதம் பதிவான நாளன்றே பொதுமக்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் பதிவுமுறை மிக சிறப்பாக இருப்பதால் பிற மாநிலங்களின் பதிவுத்துறையில் இருந்து நமது மாநிலத்திற்கு வந்து பார்ப்பது வழக்கமாகி உள்ளது. அந்த வகையில் இந்த வருடமும் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தெலுங்கானா மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்தின் பதிவுத் துறை நடைமுறைகளை பார்த்துவிட்டு, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள வில்லங்க சான்றிதழ் வழங்கும் முறையை வெகுவாக பாராட்டி சென்று உள்ளனர் என்ற செய்தியையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்.
இவ்வாறாக, பதிவுத் துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு துறையின் வருவாய் பெருக்கத்திற்காக பெரிதும் உறுதுணையாக இருக்கும் பதிவுத் துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS அவர்களுக்கும், துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டிற்கான ஆட்சியாக மட்டுமல்ல இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியாக நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சரின் கனவை நிறைவேற்றும் துறையாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயல்பட்டு வருகிறது. கடந்த 2024-2025-ஆம் நிதியாண்டில் வருவாய் ஈட்டியதைப் போன்று, வணிகவரித் துறையும், பதிவுத் துறையும், இனிவரும் காலங்களிலும் முந்தைய ஆண்டுகளை விட கூடுதல் வருவாயைப் பெற்றுத் தரும் என்பதனை மீண்டும் ஆணித்தரமாக பதிவு செய்கிறேன்.
இந்த மானியக் கோரிக்கைகளில் உறுப்பினர்கள் தங்களுடைய விவாதத்தில் கூறிய பெரும்பாலான கருத்துக்களுக்கு எனது பதிலுரையில் உரிய விளக்கங்கள் இடம் பெற்றிருக்கும் என்று நான் கருதுகிறேன். மேலும், உறுப்பினர்கள் இவ்விரு துறைகளிலும் புதிய அலுவலகங்கள், புதிய கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வணிகவரித் துறையில் 95 வெட்டுத் தீர்மானங்களும், பதிவுத் துறையில் 125 வெட்டுத் தீர்மானங்களும் அளித்துள்ளனர். வெட்டுத் தீர்மானங்களில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள், கோரிக்கைகள் குறித்து எனது பதிலுரையில் விளக்கங்கள் உள்ளதாலும், பிற கோரிக்கைகளை முதலமைச்சர் அவரின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை நன்கு பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாலும், உறுப்பினர்கள் அளித்துள்ள வெட்டுத் தீர்மானங்களை திருப்பப் பெற்று, மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களை தங்கள் வாயிலாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மானியக் கோரிக்கைகள் தொடர்பான பணிகளில் எனக்கு உறுதுணையாக இருந்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் IAS, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக தற்போது முழு கூடுதல் பொறுப்பு வகிக்கும் காகர்லா உஷா IAS, வணிகவரித் துறை ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன் IAS, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS, மற்றும் இரு துறைகளின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
The post வணிகவரி மற்றும் பதிவுத் துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்தார் அமைச்சர் பி மூர்த்தி appeared first on Dinakaran.