வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே புதிதாக இன்று (மார்ச் 12) காலை திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை அப்பகுதி மக்கள் சுங்கச்சாவடியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் கட்டணம் வசூலிக்க இருந்த பணியாளர்கள் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்லும் வழியில் செம்பட்டி- வத்தலகுண்டு இடையே தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்றாலும், திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச் சாலையாகத்தான் உள்ளது. இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் மக்கள் எதிர்ப்பு காரணமாக பயன்பாட்டுக்கு வராமலேயே இருந்தது.நான்கு வழிச் சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.