வனங்கள்- இயற்கை நமக்கு அளித்த கொடை. வனங்களை காத்தால் நாடு வளமாகும். கரியமில வாயுவினை மறுசுழற்சி செய்து அதன் வெளிப்பாட்டினை கட்டுப்படுத்துதல், பருவநிலையை முறைப்படுத்துதல், இயற்கை சீற்றங்களை தணிப்பதில் வனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இதனால்தான், வனத்தை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதும், அவர் இந்த துறை மீது தனி கவனம் செலுத்தினார். வனப்பரப்பை அதிகரிக்கப்பதற்கான திட்டங்களை தீட்ட, அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நாட்டின் வனப்பரப்பு குறித்த புள்ளிவிவரங்களை தொலையுணர்வு செயற்கைகோள்கள் உதவியுடன் கணித்து வெளியிட்டு வருகிறது இந்திய கானக அளவை நிறுவனம். கடந்த 2021ல் அந்த நிறுவனம் வெளியிட்ட அளிக்கையின்படி, தமிழகத்தின் மொத்த வனப்பரப்பு 26,41,923 சதுர கிலோ மீட்டர். இது மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 20.31 சதவீதம்தான். ஆனால், 1988ம் ஆண்டு வெளியான தேசிய வனக்கொள்கைபடி 33 சதவீத பசுமை பரப்பை அடைய முழுமூச்சில் பணியாற்ற வனத்துறையினரை முதல்வர் பணித்துள்ளார்.
“தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப் பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது” என்று 2021-22ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில், எல்லா திட்டங்களும் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான். அறிவிப்போடு முடிந்துபோன திட்டங்கள் பல. ஆனால், இது சொன்னதை செய்யும் நம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி அல்லவா. அறிவித்தபடி, பசுமை தமிழ்நாடு இயக்கம் முறைப்படி பசுமை நாயகனான நம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.
இந்த உன்னத திட்டத்தின் முக்கிய குறிக்கோளே, நாட்டு மர வகைகளை நடுவதுதான். நாட்டுமர வகைகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களையும் எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறனும் கொண்டது. இந்த இயக்கத்தின் கீழ், அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புற பகுதிகள், விவசாயப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளுக்கு சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆற்றுப் படுகைகள் மற்றும் பிற பொது நிலங்களில் பொருளாதாரம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் மர வகைகள் நடப்படும்.
மேலும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. வெறும் காடு வளர்ப்போடு நின்றுவிடாமல் ஏழை விவசாயிகளின் பொருளாதாரத்தையும் உயர்த்தும் இந்த விஷயம்தான், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தை வேறுபடுத்தி வளர்ச்சி பாதையில் முன்னிறுத்துகிறது. வனம் வளர்ப்பது சமுதாயத்துக்கு முக்கியம், அதே நேரத்தில் நம் விவசாயிகளும் பொருளாதார வளம் பெற தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் தீட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தமிழகம் எல்லா துறைகளிலும் புதிய உச்சத்தை அடைவது உறுதி.