சென்னை: சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகை செய்யும் 2 சட்ட மசோதாக்கள் உள்ளிட்ட 6 மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ல் கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான மசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களை பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தார்.