சாயல்குடி: சாயல்குடி அருகே நெல் வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடியாததால் அறுவடை பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிள்ளையார்குளம், வேடகரிசல்குளம், கூரான்கோட்டை, அல்லிக்குளம், கோட்டையேந்தல், வெள்ளம்பல், மூக்கையூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் பரவலாக மழை பெய்தது. இதனால் கண்மாய்கள் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது. இப்பகுதி வயல்வெளிகளிலும் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால் சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும், நெல்வயல்களிலும் மழைநீர் தேங்கியது.
ஆனால், மழைநீர் இன்னும் வடியவில்லை. இந்த பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் நெல் வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மழைநீர் வடியாததால் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து பிள்ளையார்குளம் விவசாயி சத்தியமூர்த்தி கூறியதாவது: இந்த பகுதியில் விவசாயிகள் ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். தற்போது வரை மழைநீர் வடியாத நிலையில் அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் இறக்க முடியவில்லை.
விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் செய்வதறியாது பரிதவித்து வருகிறோம். பாடுபட்டு வளர்த்த நெற்பயிர்கள் மழைநீரில் அழுகி வருவதை பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. சில இடங்களில் விளைந்த நெல்பயிர்கள் மழைநீரில் சரிந்து மீண்டும் முளைக்க தொடங்கிவிட்டன. இதனால் பெரும் இழப்பை சந்தித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
The post வயல்களில் வடியாத மழைநீர்; நெற்பயிர் அறுவடையில் தொடரும் தாமதம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.