*பொதுமக்கள் அச்சம்
வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் மூலவைகை வறண்டு வருவதால், குடிநீர் தேடி தோட்டங்களுக்குள் வன விலங்குகள் அடிக்கடி வர தொடங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.வருசநாடு வனப்பகுதியில் மழை இல்லாததால் மூல வைகை ஆறு கடந்த சில நாட்களாக வறண்டு கிடக்கிறது.
இதனால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் தோட்டங்களுக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வருசநாடு அருகே நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, அரசரடி, பாலாறு, பொம்மியாறு, போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே போதிய மழை இல்லாமல் மூல வைகை ஆறு படிப்படியாக வறண்டு வருகிறது.
மேலும் வனவிலங்குகள் குடிநீர் குடிப்பதற்கு மூல வைகை ஆற்றுக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில தினங்களாகவே மூல வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது. சில இடங்களில் முற்றிலும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் தோட்டங்கள் மற்றும் அங்குள்ள வீடுகளுக்கு சென்று கரடி, மான், குரங்கு, யானைபோன்ற வனவிலங்குகள் நீரை பருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சில தினங்களாகவே வனத்துறை மூலம் சிமெண்ட் தொட்டி விலைக்கு வாங்கி வனப்பகுதியில் நீரை ஊற்றி வைப்பது வழக்கமாக உள்ளது. ஆனாலும் போதிய நீர் கிடைக்காததால் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வனவிலங்குகள் தனியார் தோட்டங்களுக்கு வரிசையாக வருவது தொடர்கதையாகி வருகிறது.இதை தடுப்பதற்கு அரசு மற்றும் வனத்துறை சார்பில் நடவடிக்கை அதிகப்படுத்தினால் மட்டும் வனவிலங்குகளை பாதுகாக்க முடியும்.
அவ்வாறு வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் வனவிலங்குகளும் வளங்களும் அழிந்து விடும் சூழலில் உள்ளது. மேலும், மழை பெய்யாமல் நீர் தேடி தோட்டங்களுக்குள் யானை, கரடி போன்ற வனவிலங்குள் நுழையும் போது மனித விலங்கு மோதல் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இது குறித்து கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த வன ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு நாளும் வனவிலங்குகள் வனத்திலிருந்து தனியார் தோட்டங்களில் வந்து குடிநீர் குடித்து செல்வது தொடர்கதையாக உள்ளது.
இதனை தடுப்பதற்கு வனத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆனாலும் செந்நாய், தெருநாய்கள், துரத்தி மான் பலியாகி வருவது தொடர்கதையாக உள்ளது. எனவே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து அதிலுள்ள வனவிலங்குகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.
The post வரத்தின்றி வறண்டு வரும் மூலவைகையாறு குடிநீர் தேடி தோட்டங்களுக்குள் வன விலங்குகள் ‘விசிட்’ appeared first on Dinakaran.