அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகம் முழுவதும் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 650 வாகனங்களில் 7 ஆயிரம் டன் காய்கறிகள் வருகிறது. கடந்த 2 மாதங்களாக அனைத்து காய்கறிகளின் வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது 800 வாகனங்களில் 9ஆயிரம் டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளது. இதன்காரணமாக, ஒரு கிலோ வெங்காயம், உருளை கிழங்கு, நூக்கல், காலிபிளவர், சுரக்காய், புடலங்காய், கத்திரிக்காய் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ தக்காளி, சவ்சவ் ரூ.10க்கும், பீட்ருட் ரூ.13க்கும் முள்ளங்கி ரூ.15க்கும், முட்டைகோஸ் ரூ.7க்கும் பாகற்காய், அவரைக்காய், குடைமிளகாய், கொத்தவரங்காய் ரூ.30க்கும் வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கோவைக்காய் ரூ.25க்கும் முருங்கைக்காய் ரூ.35க்கும், காராமணி ரூ.40க்கும், சேனை கிழங்கு ரூ.50க்கும், இஞ்சி ரூ.45க்கும், பட்டாணி ரூ.70க்கும், பூண்டு ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோயம்பேடு காய்கறி சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் முத்துகுமார் கூறுகையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் காய்கறிகளின் விளைச்சல் அதிகர்ப்பால் அதன் வரத்தும் அதிகரித்து அனைத்து காய்கறிகளின் விலை சரிந்துள்ளது. விலை குறைவு இந்த மாதம் முழுவதும் நீடிக்கும். அடுத்த மாதம் விலை உயரும்,’ என்றார்.
* பூக்கள் விலை குறைந்தது
கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் வருகின்றன. இந்நிலையில் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.500லிருந்து ரூ.400க்கும், ஐஸ் மல்லி ரூ.400லிருந்து ரூ.300க்கும், ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.350லிருந்து ரூ.250க்கும், கனகாம்பரம் ரூ.400லிருந்து ரூ.300க்கும், அரளி பூ ரூ.200லிருந்து ரூ.100க்கும், சாமந்தி ரூ.120லிருந்து ரூ.80க்கும், சம்பங்கி ரூ.250லிருந்து ரூ.50க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120லிருந்து ரூ.80க்கும் விற்பனையானது.
The post வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் சரிவு appeared first on Dinakaran.