*விவசாயிகள் கவலை
*மானியத்தில் உரம், விதை வழங்க கோரிக்கை
தஞ்சாவூர் : வெளிமாவட்டத்தில் இருந்து கோழிகொண்டை பூ வரத்து அதிகம் வருவதால் உள் மாவட்டத்தில் விளையும் பூக்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அடுத்த கோபால்நகர் பகுதியில் கோழிகொண்டை பூ, செண்டி பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நெல், கரும்பு, பருத்தி, உளுந்து மட்டுமின்றி மல்லிகை, செண்டிப்பூ, கோழி கொண்டை பூ சாகுடியும் செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு கோழி கொண்டை பூ சாகுபடி செய்வதில் சிறு விவசாயிகளின் கவனம் திரும்பி உள்ளது. காரணம் இந்த வகை பூச்செடிகளை சாகுபடி செய்வதற்கான செலவு மற்றும் தண்ணீர் தேவை மிக குறைவு. மேலும், பூக்களை பல நாட்கள் பறிக்காமல் இருந்தால் கூட வாடுவதில்லை.
இதனால் தேவைப்படும் போது பூக்களை பறித்துக்கொள்ளலாம். எனவே தஞ்சை மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பல வகை பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி சரவணன் கூறுகையில்நான் சுமார் 3 ஏக்கரில் கோழி கொண்டை பூ, மற்றும் 2 ஏக்கரில் செண்டி பூ சாகுபடி செய்துள்ளேன். கரும்பு, வாழை உள்ளிட்ட ஆண்டு பயிர்களில் இருந்து கிடைக்கும் வருமானம் அதிகம் தான். அதற்காக வருடம் முழுவதும் உழைப்பு தர வேண்டும்.
தண்ணீர் தேவை. ஆனால் குறுகிய கால பயிர்களை பயிரிடும் போது குறைந்த நாட்களில் வருவாயை ஈட்டலாம். செலவும் குறைவு. நான் 3 ஏக்கரில் கோழி கொண்டை பூ சாகுபடி செய்துள்ளேன். சாகுபடி செய்த 40வது நாளில் பூக்கள் பூக்க தொடங்கிவிட்டன. தொடர்ந்து 90ல் இருந்து 100 நாட்கள் வரை பூ கிடைக்கிறது. நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வாரத்துக்கு ஒரு முறை மருந்து தெளித்து வருகிறேன்.
பொதுவாக பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பண்டிகை, கோவில் திருவிழா காலங்கள், சுப முகூர்த்த நாட்கள் அதிகம் கொண்ட மாதங்களில் பூக்கள் அறுவடைக்கு வரும்படி பயிர்சாகுபடி செய்ய வேண்டும். இந்த காலங்களில் பூக்கள் மாலை கட்டுவதற்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, பூக்களின் தேவை அதிகரிக்கும் போது சந்தைகளில் பூக்களுக்கான விலை ஏறுமுகமாக இருக்கும்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோழி கொண்டை பூ கிலோ 60க்கு விற்பனை ஆனது. தற்போது கிலோ 25 முதல் 30க்கு விற்பனை ஆகிறது. காரணம் தற்போது வெளிமாவட்டங்களில் இருந்து பூக்களின் வரத்து அதிகம் வர தொடங்கியுள்ளது. இதனால் சொந்த மாவட்டத்தில் விளையும் பூக்கு விலை கிடைப்பதில்லை. நான் எனது வயலில் விளையும் பூக்களை எடுத்துக் கொண்டு தஞ்சை பூ சந்தையில் விற்பனை செய்து வருகிறேன்.
அதேபோல் செண்டி பூ கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ 40 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதன் விலை குறைந்து ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. 45 நாட்களில் செடி வைத்து பூ பூத்து விடும். பனி காலம் தொடங்குவதற்கு முன்பே பூ அறுவடை செய்ய வேண்டும். ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவு செய்துள்ளோம்.
ஒரு கிலோ பூவின் விலை ரூ.60-க்கு விற்பனை செய்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும். ஆனால் பூவின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு பூ சாகுபடியை மேம்படுத்த வங்கி கடன், மானிய விலையில் உரம், விதை ஆகியவை வழங்க வேண்டும். சொட்டு நீர் குழாய் உள்ளிட்ட கருவிகளை மானிய விலையில் வாங்கினால் தங்களுக்கு மேலும் அதிக மகசூல் கிடைக்கும்.இதனால் கூடுதல் லாபம் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
The post வரத்து அதிகரிப்பால் கோழிக்கொண்டை பூ விலை சரிவு appeared first on Dinakaran.