கொழும்பு: இலங்கையில் சிங்களர்கள் மூலம் ஹீரோவாக கொண்டாடப்பட்ட மஹிந்த ராஜபக்சேவின் குடும்பம்.. தற்போது அதே சிங்களர்கள் மூலம் தூக்கி வீசப்பட்டுள்ளது.
தூக்கப்பட்ட கைகள்.. கனீர் கோஷம்.. முகத்தில் ஒரு ஆணவ வெறி.. இதுதான் ஹிட்லர் காலத்தில் நாஜிக்களிடம் இருந்த தோற்றம். உங்களை யூதர்கள் ஏமாற்றிவிட்டனர்.. உங்கள் சொத்துக்களை அபகரித்துவிட்டார்கள். அவர்கள் இந்த நாட்டில் இருக்க கூடாது. பெரும்பான்மையான நாஜிக்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் யூதர்கள் இருக்க கூடாது என்ற victim card அரசியலை பயன்படுத்தி.. சுயபச்சாதாபத்தை ஏற்படுத்தி அதில் வென்றும் காட்டியவர் ஹிட்லர்.
ஹிட்லர்
ஜெர்மனியில் ஹிட்லர் என்ற அந்த பாசிஸ்ட் அறிமுகம் செய்த கையை உயர்த்தி நிற்கும் தோற்றம் ஒரு விடுதலையின் அடையாளமாக காட்டப்பட்டது. யூதர்களிடம் இருந்து நாஜிக்களை விடுதலை செய்யும் கோஷமாக ஹிட்லர் இந்த தோற்றத்தை பயன்படுத்தினார். ஆனால் ஹிட்லர் என்ற அந்த பாசிஸ்ட் வீழ்ந்த பின்.. அதே குறியீடு.. அதே தோற்றம் அகங்காரத்தின், பாசித்ததின் அடையாளமாக ஆகிப்போனது. எந்த மக்கள் கையை உயர்த்தி நிற்கும் தோற்றத்தை கொண்டாடினார்களோ.. அதே ஜெர்மனி மக்கள் அந்த தோற்றத்தை.. அசிங்கத்தை அடையாளமாக மாற்றினார்.
உலகம் முழுக்கவே பாசிஸ்டுகள் இப்படிதான் வீழ்ந்து இருக்கிறார்கள். மெஜாரிட்டி – மைனாரிட்டி அரசியலை செய்து “சில காலம்” ஆட்சி செய்த தலைகள் எல்லாம் இப்படித்தான் தங்கள் சிம்மாசனத்தை இழந்துள்ளனர். வரலாற்றில் பல தலைகள் இப்படி கொட்டிக்கிடக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளவர் மஹிந்த ராஜபக்சே. இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பை வீழ்த்திய பின் அந்த நாட்டின் ஹீரோவாக மஹிந்த ராஜபக்சே போற்றப்பட்டார். தமிழர்கள் மீதான இவரின் வன்மம் இன்னும் தீராத நிலையில்.. சிங்களர்கள் இவரை தங்கள் ஹீரோ போல கொண்டாடினார்கள்.
ஹீரோவாக மஹிந்த ராஜபக்சே போற்றப்பட்டார்
எங்கள் நாட்டை இணைத்த ஹீரோ அவர்.. அவரை நாங்கள் போற்றுவோம் என்று பாராட்டி புகழ்ந்தனர். மஹிந்தவிடமும்.. அப்போது இளம் தலைவர்.. துடிப்பானவர்.. வலிமையானவர் என்றெல்லாம் நிறைய கவர்ச்சியான குணங்கள் இருந்தனர். இலங்கை மீடியாக்களும் இவரை ரட்சகன் போல கொண்டாடின. புத்த மதத்தையும்.. சிங்களர்களையும் காக்க வந்த ரட்சகன் இவர் என்று இலங்கையின் மீடியாக்கள் இவரை கொண்டாடின.
தேச துரோகம்
மஹிந்தவை பற்றி பேசினால்.. அது தேச துரோகம்.. தீவிரவாதம் என்று சொல்லும் அளவிற்கு அங்கு நிலைமை மோசமாக இருந்தது. மஹிந்த இடையில் அதிபர் பதவியை இழந்து.. பின்னர் மீண்டும் இரண்டு முறை பிரதமர் ஆன போதும் கூட அவருக்கு தமிழர்களின் தயவு தேவை பட்டதே நிலை. கடந்த முறை அதிபர் தேர்தலில் ராஜபக்சே குடும்பம் கோத்தபாயவை களத்தில் இறக்கிய போதும் கூட.. அவர்களின் அரசியல் முழுக்க முழுக்க இலங்கையின் பெரும்பான்மை புத்த மதத்தினரை குறி வைத்துதான் இருந்தது.
பேரினவாதம்
தமிழர்களின் வாக்குகளை கேட்காமல்.. நேரடியாகவும், மறைமுகமாகவும் சிங்களர்களின் வாக்குகளை கேட்டு.. பிரிவினை வாத அரசியலை செய்து, அதன்மூலமே இவர்கள் ஆட்சிக்கும் வந்தனர். தமிழர்களின் ஆதரவு வேண்டாம் என்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும் இவர்கள் சொல்லி வந்தனர். ராஜபக்சே இலங்கையின் ஆட்சி கட்டிலில் அமர காரணமாக இருந்தது சிங்கள பேரினவாதம்தான். உங்களை நாங்கள்தான் காக்க முடியும்.. சிங்களர்களும், புத்த மதமும் பாதுகாப்பாக இருப்பதை நாங்களே உறுதி செய்ய முடியும் என்பதை முன் வைத்தே ராஜபக்சே குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
ராஜபக்சே குடும்பம்
ஆனால் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இன, மதம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி வரும் அரசுகள் நீண்ட காலம் இருந்ததாக சரித்திரம் இல்லை. ஏனென்றால் இது போன்ற பிரச்சனைகளை மையப்படுத்தும் போது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் மீது அரசு கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். இன, மதம் மீது கவனம் செலுத்திய இலங்கை அரசு சரியாக பொருளாதார திட்டங்களை வகுக்க முடியாமல் வீழ்ச்சி அடைந்தது. பேரினவாதத்தின் மீது கவனம் செலுத்திய இலங்கை மக்களின் அடிப்படை பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தவில்லை.
பொருளாதார சரிவு ‘
பொருளாதார கொள்கைகளை வகுப்பது பற்றிய போதிய விழிப்புணர்வு ராஜபக்சே குடும்பத்திற்கு இல்லை. என்ன செய்தாலும் நாம்தான் ஆட்சியில் இருப்போம்.. நம்ம இனம் நமக்குதான் ஆதரவாக இருக்கும் என்ற மிதப்பு அவர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் உலகில் எல்லா பாசிஸ்டுகளையும்.. அவர்களை ஹீரோவாக கொண்டாடிய அதே மக்கள்தான் தூக்கி வீசினார்கள். அதே வரலாறுதான் இலங்கையில் நடந்தேறி உள்ளது. ராஜபக்சே குடும்பத்தை ஹீரோவாக கொண்டாடிய அதே பெரும்பான்மை சிங்களர்கள்தான் அவரை அரியணையை விட்டு தூக்கி வீசி உள்ளனர்.
பெரும்பான்மை சிங்களர்கள்
யாரை ஹீரோவாக சிங்களர்கள் பார்த்தார்களோ.. அதே சிங்களர்கள்தான் தற்போது மஹிந்தவை தங்களின் வில்லனாக பார்த்து வருகிறார்கள். எப்படி ஹிட்லரின் நாஜி கோஷம் ஒரு காலத்தில் ஹீரோயிசமாக பார்க்கப்பட்டு பின்பு வில்லனிஸமாக மாறியதோ அப்படித்தான் இலங்கையிலும் நடந்தேறி உள்ளது. என்னை கைவிட மாட்டார்கள் என்று மஹிந்த எந்த சிங்களர்களை நம்பி பேரினவாதத்தை பரப்பினாரோ அதே சிங்களர்கள்தான் அவரின் வீட்டை தீ வைத்து போகி கொண்டாடி வருகிறார்கள்.
காலம் சரி செய்யும்
வரலாறு என்றும்.. எப்போதும் பாசிஸ்டுகளை மன்னித்ததே இல்லை.. அதற்கு மீண்டும் ஒரு உதாரணமாக ஆகி உள்ளார் மஹிந்த ராஜபக்சே. இலங்கையின் மன்னன் போல வர்ணிக்கப்பட்ட மஹிந்த இப்போது நாட்டை விட்டே தப்பி ஓடும் திட்டத்தில் இருக்கிறாராம். உள்நாட்டு போரை முடித்துவிட்டு.. மக்கள் இடையே ரட்சகன் போல பார்க்கப்பட்ட ஒரு வலிமையான தலைவருக்கு இப்படி நிலைமை வரும் என்பதை 2-3 வருடங்களுக்கு முன் யாராவது சொல்லி இருந்தால்.. இலங்கை மக்கள் நம்பி இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு வலிமையான இடத்தில் இருந்த மஹிந்தவை அவரின் பாசிஸ்ட் அரசியலே வீழ்த்தி உள்ளது.. காலம் அனைத்தையும் சரி செய்யும் என்று சும்மாவா சொன்னார்கள்!