டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதையொட்டி அங்கு பிரதானமாக களத்தில் இருக்கும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போட்டி போட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். 300 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு மாதம் ரூ.2500 ரொக்கம், ரூ.500-க்கு காஸ் சிலிண்டர், முதியோருக்கு இலவச சிகிச்சை, போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்கு நிதியுதவி, எல்கேஜி முதல் முதுநிலைக் கல்வி வரை இலவசம் என இலவசங்களின் பட்டியல் நீண்டு வருகிறது.
அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் நடுத்தர வர்க்கத்தினரின் சிரமங்கள் குறித்து ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். ‘‘ஓட்டு வங்கிக்கும் நோட்டு வங்கிக்கும் இடையில் சாண்ட்விச் போல தவிக்கிறது நடுத்தரவர்க்கம். எந்த அரசுகள் வந்தாலும் நடுத்தர வர்க்கத்தை வரிகள் போட்டு பிழிந்து எடுக்கிறார்கள். வரி தீவிரவாதத்தால் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கமே. இதனால், இளம் தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே யோசிக்கிறார்கள்’’ என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.