திருவள்ளூர்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததோடு, இருவருக்கும் ரூ.40 லட்சம் அபராதமும் விதித்து திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். திருத்தணியைச் சேர்ந்தவர் அருணாச்சலம், இவரது மனைவி லலிதா. அருணாச்சலம் கடந்த 1980ல் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் கடந்த 9.2.2007ல் கோட்டாட்சியராக பதவி உயர்வு பெற்று திருச்சி மாவட்டம், முசறியில் ஓராண்டு பணிபுரிந்தார். அப்போதைய காலகட்டத்தில் அரசு ஊழியராக இருந்துகொண்டு அவரது மனைவி பேரில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.69 லட்சத்தில் அசையா மற்றும் அசையும் சொத்துகளை வாங்கி குவித்ததாக ஊழல் தடுப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக அமுதா ஆஜாரானார். வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நேற்று முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி மீனாட்சி முன்பு வந்தது. அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்தது போன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அருணாச்சலத்துக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.35 லட்சம் அபராதமும், அவரது மனைவி லலிதாவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அவர் தீர்ப்பு வழங்கினார்.
The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மற்றும் மனைவிக்கு தலா 3 ஆண்டு சிறை: ரூ.40 லட்சம் அபராதம் விதிப்பு, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.