சென்னை: மே மாதம் இறுதியில் மீண்டும் வெப்பம் உயரும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரித்து சுட்டெரித்து வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் கொடுமை சற்று அதிகமாகவே உணர முடிகிறது. அதிகபட்சமாக தற்போது வரை 41 டிகிரி வெயில் பதிவாகியுள்ள நிலையில், இனி வரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: வளிமண்டலத்தில் வறண்ட காற்றும், தரைக்காற்றில் அதிக ஈரப்பதமும் இருப்பதால் வெப்பநிலை அதிகமாக இருக்கிறது. வரும் நாட்களிலும் அதாவது, இந்த மாதம் இறுதி வரை வெப்பம் இயல்பைவிட அதிகமாகவே பதிவாகும். வழக்கமாக மே மாதம் 4-ம் தேதியில் இருந்து அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்கும். இந்த ஆண்டு கத்தரி வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருக்கும். காரணம், மே முதல் வாரத்தில் இருந்து 18-ம் தேதி வரையிலான நாட்கள் வரையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
எனவே அப்போது வெயில் குறைந்து, மே மாதம் இறுதியில் மீண்டும் வெப்பம் உயரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருத்தணி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை மீனம்பாக்கம் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் உள், மேற்கு மாவட்டங்களில்தான் வெப்பம் இயல்பைவிட அதிகமாக பதிவாகும் என்றும், வருகிற 24-ம் தேதிக்கு பிறகு அதிகபட்சமாக 42 டிகிரி வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வரும் நாட்களிலும் வெப்பம் இயல்பைவிட அதிகமாகவே பதிவாகும்: வானிலை ஆய்வாளர்கள்! appeared first on Dinakaran.