*மலை கிராம மக்கள் எதிர்பார்ப்பு
சத்தியமங்கலம் : கடம்பூரை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகுமா? என மலை கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தவரையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி என பிரிக்கப்பட்டு அவற்றுக்கு முறையாக தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தப்படாத காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் படி கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து சாலை வசதி, குடிநீர் விநியோகம், சுகாதாரப்பணிகள், ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதியினை வழங்கி வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளை நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைத்தல் மற்றும் பேரூராட்சியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் குத்தியாலத்தூர், குன்றி மற்றும் கூத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகள் கடம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ளன.
இந்த ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடம்பூரில் இருந்து சத்தியமங்கலத்திற்கு 27 கிமீ தூரமும், கூத்தம்பாளையம் மற்றும் குன்றி பகுதியிலிருந்து 42 கிமீ தூரமும் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் கடம்பூரை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலை கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து ஊரக வளர்ச்சி துறை மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியில் இருந்த பிரபாகர் ஐஏஎஸ் கடம்பூர் மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தனியாக ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினார்.
இதில் குத்தியாலத்தூர் ஊராட்சியை கடம்பூர், இருட்டிபாளையம், பவளக்குட்டை, கரளியம், அரிகியம் என ஐந்து ஊராட்சிகளாக பிரித்தும், அதனுடன் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திங்களூர் ஊராட்சியினை திங்களூர் மற்றும் கோட்டமாளம் என 2 ஊராட்சிகளாக பிரித்து ஏற்கனவே உள்ள குன்றி மற்றும் கூத்தம்பாளையம் ஊராட்சிகளை சேர்த்து மொத்தம் 9 ஊராட்சிகள் கொண்ட கடம்பூரை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க கருத்து கேட்புக் கூட்டத்தில் மலை கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சியினரிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இது தொடர்பான கோப்புகள் தயார் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரிகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இந்நிலையில் கடம்பூர் தனி ஊராட்சி ஒன்றியம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையே தற்போது மீண்டும் இது தொடர்பாக கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகளில் உள்ள மக்கள் தொகை விபரம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் கேட்டறியப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கடம்பூர் தனி ஊராட்சி ஒன்றியமாக அமைப்பது குறித்த விபரங்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் மூலமாக சென்னை ஊரக உள்ளாட்சி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் புதிதாக ஏற்படுத்தப்படும் ஊராட்சி ஒன்றியங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கடம்பூரை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கடம்பூர் மலைப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
The post வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கடம்பூரை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அறிவிக்கப்படுமா? appeared first on Dinakaran.