இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அட்டை (ஏசிசி) வைத்திருப்பவர்கள் வரும் 31ம் தேதிக்குள் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு கெடு விதித்துள்ளது. தீவிரவாத விவகாரத்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையேயான உறவு மோசமடைந்து வருகிறது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் பல்வேறு நாசவேலைகளை செய்து வருகின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அட்டை வைத்திருப்பவர்கள் வரும் 31ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்நாட்டு மீடியாக்களில் கசிந்துள்ள இந்த அரசு உத்தரவில், ‘சட்டவிரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினரை அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் திட்டம் 2023 நவம்பர் 1 முதல் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அனைத்து சட்டவிரோத வெளிநாட்டினரும், ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அட்டை வைத்திருப்பவர்களும் வரும் 31ம் தேதிக்குள் தாமாக முன்வந்து பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும். அதன்பிறகு ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு கடத்தல் தொடங்கும்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காலகட்டங்களில் ஆப்கானில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பாகிஸ்தானில் இடம் பெயர்ந்துள்ளனர். அகதிகளுக்கான ஆவணங்களுடன் உள்ள சுமார் 8 லட்சம் பேர் ஆப்கான் குடிமக்கள் அட்டை வைத்துள்ளனர். இதுதவிர உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆப்கானை சேர்ந்த பலர் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த உத்தரவு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதவிர, அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைய பாகிஸ்தானில் காத்திருக்கும் 15,000 ஆப்கான் மக்களும் தங்களின் தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
The post வரும் 31ம் தேதிக்குள் ஆப்கான் நாட்டினர் வெளியேற கெடு விதித்தது பாகிஸ்தான் appeared first on Dinakaran.