பீஜிங்: வர்த்தகத்தில் அச்சுறுத்தல் கூடாது, சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்காவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு எதிராக கடந்த 2ம் தேதி பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். அதனால் டிரம்பிடம் பல நாடுகள் சரணடைந்தன. 75 நாடுகள் ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றதால் பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
ஆனால் சீனா மட்டும் அமெரிக்காவை எதிர்த்து நின்றது. அதனால் சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 145 சதவீதமாக வரியை உயர்த்திய போது, சீனா சற்றும் அசராமல் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 125 சதவீதமாக வரியை அதிகரித்தது. இதற்கு பதில் நடவடிக்கையால் வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் போயிங் நிறுவன விமானங்களை வாங்க வேண்டாம் என சீன விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில் இதற்கு பதிலடியாக சீன இறக்குமதிகளுக்கான வரியை 245 சதவீதமாக அதிகரித்து வெள்ளை மாளிகை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளின் விளைவாக அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245 சதவீத வரியை எதிர்கொள்கிறது என வெள்ளை மாளிகையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து டிரம்பின் கருத்துக்களை நிருபர்களிடம் கூறிய வெள்ளைமாளிகையில் ஊடக செயலாளர் கரோலின் லீவிட், ‘சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் மட்டுமே இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்காக தன்னை அணுகுமாறு சீனாவுக்கு டிரம்ப் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார். எனவே முடிவு சீனாவின் கையில் உள்ளது. எங்களுடன் சீனா ஒப்பந்தம் செய்ய வேண்டும். அவர்களுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டியது இல்லை’ என்றார்.
இந்நிலையில், சீனா வெளியுறவுத்துறை கூறுகையில், ‘அமெரிக்கா வர்த்தக போரை தொடங்கியது. நமது நியாயமான நலன்களையும், சர்வதேச நியாயத்தையும், நீதியையும் பாதுகாக்க சீனா தேவையான எதிர் நடவடிக்கைகளை எடுத்தது. அமெரிக்கா உண்மையிலேயே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்பினால், அதிகபட்ச அழுத்தத்தை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, சீனாவை பிளாக்மெயில் செய்வதையும், மிரட்டுவதையும் நிறுத்த வேண்டும். சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளது.
The post வர்த்தகத்தில் அச்சுறுத்தல் கூடாது; பேச்சுவார்த்தைக்கு தயார்; அமெரிக்காவுக்கு சீனா அழைப்பு appeared first on Dinakaran.