காஞ்சிபுரம்: திருக்காலிமேடு அருகே அல்லப்புத்தூர் ஏரியில் மான்கள் இனப்பெருக்கம் செய்து கூட்டம், கூட்டமாக சுற்றித் திரியும் நிலையில், கோடை காலம் தொடங்கியதால் ஏரி வறண்டுள்ளது. இதனால் குடிநீரை தேடி ஊருக்குள் புகும் மான்களுக்கு, தெருநாய்களால் ஆபத்து ஏற்படும். எனவே, ஏரியில் செயற்கை குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் 22-வது வார்டு திருக்காலிமேடு அருகே அமைந்துள்ள அல்லப்புத்தூர் ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நத்தப்பேட்டை ஏரி மற்றும் மஞ்சள் நீர் கால்வாயின் உபரிநீர், அல்லப்புத்தூர் ஏரியில் செல்லும் நிலை இருந்தது. ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கால்வாயாக மாறியதால் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. ஆனால், மழைக் காலங்களில் மட்டும் ஏரியில் ஆங்காங்கே சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கும் நிலை உள்ளது. மேலும், ஏரியில் கருவேல மரங்கள் உட்பட ஏராளமான மரங்கள் வளர்ந்து காடுபோல் அடர்ந்து காணப்படுகின்றன.