ஜோயல் என்ற தொழிலதிபர் கொலையாகிக் கிடக்கிறார். எந்தவொரு தடயமும் கிடைக்காத நிலையில், விரைவாகக் கொலையாளியைக் கண்டுபிடிக்கும்படி, இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் துறை அதிகாரியான திவாகரிடம் (சுந்தர்.சி) மறைமுகமாக வழக்கை ஒப்படைக்கிறார். அவரின் உயரதிகாரி. திவாகர் கொலையாளியை நெருங்கினாரா இல்லையா என்பது கதை.
ஒரு கொலையைத் துப்புத்துலக்கும் படத்தில் பார்வையாளர்களை உசுப்பிவிடும் சுவாரஸியமான திருப்பங்களை அளவாக, அதேநேரம் திரைக்கதைக்குள் உரிய இடங்களில் வைத்திருக்கிறார் இயக்குநர் வி.ஆர்.மணி சேயோன். எடுத்துக்காட்டாகக் கொலை நடந்த இடத்தில் கிடைக்கும் தலைமுடியைக் கொண்டு ‘ஜீனோடைப்’ என்ற டி.என்.ஏ தொழில்நுட்பத்தின் மூலம் கொலையாளியின் தலையும் முகமும் எப்படி இருந்திருக்க வாய்ப்பு அதிகம் எனத் துப்புத்துலக்கி விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதைக் கூறலாம்.