சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த கட்டுமான கண்காட்சி நிகழ்ச்சியில், புதுநகர் வளர்ச்சித் திட்டம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர், பரந்தூர் ஆகிய 9 வளர்ச்சி மையங்களில் நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்து இணைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், வளர்ச்சிக்கு வித்திடவும் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உள்ள கிளாம்பாக்கம், மாதவரம் போக்குவரத்து முனையங்களுடன் குத்தம்பாக்கம் முனையமும் விரைவில் சேரவிருக்கிறது. இவற்றுடன் செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் நவீன பேருந்து முனையங்கள் அமையவுள்ள நல்ல செய்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கோவை, மதுரை, ஓசூர், சேலம், திருப்பூர், திருச்சி, வேலூர், திருநெல்வேலி ஆகிய நகரங்கள் உள்ளடங்கிய 10 மண்டல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இதில் 136 நகரங்கள் வளர்ச்சியடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கே வித்திடும் திட்டங்களாகும்.