லாகூர்: வளர்ச்சியில் இந்தியாவை மிஞ்சவில்லை என்றால் என் பேரை மாற்றிக் கொள்வேன் என்று பாகிஸ்தான் பிரதமர் சபதம் எடுத்துள்ளார். இவரது உரையை பலரும் கேலி செய்து வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள தேரா காசி கானுக்கு, அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சென்றார். அப்போது அவர் பேசுகையில், ‘மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எனது அரசு கடுமையாக பாடுபடுகிறது. பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை மீட்டெடுக்க இரவும் பகலும் உழைக்கிறோம்.
ஆண்டவன் பாகிஸ்தானை ஆசீர்வதிப்பார். என்னுடைய முயற்சியால் இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் வளர்ச்சியடையும். ஒருவேளை அவ்வாறு பாகிஸ்தான் வளர்ச்சியடையவில்லை என்றால், எனது பெயர் ஷாபாஸ் ஷெரீப் அல்ல; இதனை எனது மூத்த சகோதரரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பின் மீது சத்தியப்பிரமாணம் செய்கிறேன். நான் நவாஸ் ஷெரீப்பின் ரசிகன்; அவரை எப்போதும் பின்பற்றுபவன். பாகிஸ்தானை முன்னோக்கி அழைத்து செல்லவும், இந்தியாவைத் தோற்கடிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில், இந்தியாவை மிஞ்சவில்ைல என்றால் எனது பெயரை (ஷாபாஸ் ஷெரீப்) மாற்றிக் கொள்வேன்’ என்று கூறினார். ஷாபாஸ் ஷெரீப்பின் இந்த உரையின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இப்போது பாகிஸ்தான் மக்களே ஷாபாஸ் ஷெரீப்பை விமர்சிக்கிறார்கள். அவர்கள் அவரை தற்பெருமை பேசும் நபர் என்றும், எந்தவொரு உறுதியான வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத பிரதமர் என்றும் கேலி செய்து வருகின்றனர்.
The post வளர்ச்சியில் இந்தியாவை மிஞ்சவில்லை என்றால் என் பேரை மாற்றிக் கொள்வேன்: கேலியாகும் பாகிஸ்தான் பிரதமரின் சபதம் appeared first on Dinakaran.