*புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் வரவேற்பு
நாமக்கல் : வளையப்பட்டி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், வாகனம் மூலம் கிராமங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கிராமங்களில் வசிக்கும் ஏழை பெற்றோர்களின் குழந்தைகள் அதிக அளவில் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு 1,550 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர். இந்த பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் அரசு வேளாண்மை கல்லூரியிலும் சேர்க்கை பெறுகின்றனர். எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வில் கடந்த காலங்களில் 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக இப்பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடந்து முடிந்த எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் இப்பள்ளி மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்எஸ்எல்சியில் 98 சதவீதமும், பிளஸ்2வில் 95 சதவீதம் தேர்ச்சியும் பள்ளி பெற்றுள்ளது.
பிளஸ்2 தேர்வில் இப்பள்ளி மாணவி நிவேதா 581 மதிப்பெண்ணும், 10ம் வகுப்பில் மாணவர் தருண் 486 மதிப்பெண்ணும் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளனர். இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 13 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களில் 2 பேர் மாற்றுத்திறனாளி மாணவர்கள். இவர்கள் பொதுத்தேர்வு எழுத ஸ்கிரைப் என அழைக்கப்படும் சொல்வதை எழுத 2 பாட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அப்படி இருந்தும் இரண்டு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளது, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. தற்போது, பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்குமார், வாகனம் ஏற்பாடு செய்து தினமும் கிராமப்புறங்களுக்கு சென்று, பெற்றோரிடம் அரசு பள்ளியில் சேரவேண்டியதன் அவசியம் குறித்து பிரசாரம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிரசார வாகனம் தினமும் காட்டுப்புத்தூர், மேய்க்கல்நாய்க்கன்பட்டி, மோகனூர், அணியாபுரம், வேப்பநத்தம் வரை கிராமம், கிராமாக சென்று, வளையப்பட்டி அரசு பள்ளியின் மாணவ, மாணவியரின் சாதனைகள், அரசு பள்ளியின் சேவை குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவர்மலை, மேய்க்கல்நாய்க்கன்பட்டி போன்ற ஊர்களில் இருந்தும் இந்த பள்ளியில் பிளஸ்1 வகுப்பில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளியில் மாணவ, மாணவியருக்கு அரசு வழங்கும் சலுகைகள், தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும் விளம்பர வாகனங்களில் பெற்றோருக்கு எளிமையாக விளக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 231 பேருக்கு அட்மிஷன்
பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்குமார் கூறுகையில், வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 வில் தொழிற்கல்வியுடன் 7 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியும், ஒழுக்கமும், நேர்மையும் கற்றுத் தரப்படுகிறது. வன்முறை என்ற எண்ணம் மாணவ, மாணவியரின் மனதில் தோன்றக் கூடாது என்பதற்காக பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் உளவியல் ஆலோசனை அளிக்கப்படுகிறது.
மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். அதுகுறித்து பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் தான் விளம்பர வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ்1 வகுப்பில் இதுவரை 231 பேர் சேர்ந்துள்ளனர். தொடர்ந்து அட்மிஷன் நடைபெற்று வருகிறது என்றார்.
The post வளையப்பட்டி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வாகனம் மூலம் கிராமங்களில் பிரசாரம் appeared first on Dinakaran.