சென்னை: வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி கடந்த 1998ம் ஆண்டு துவங்கி, 27 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான போட்டி சென்னையில் நடைபெற்றது. இதன் துவக்க விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி ரவிக்குமார் உஜ்ஜல் புயான், ஆர்.மகாதேவன் ஆகியோருடன் உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.எஸ்.சுந்தர் விழாவினை துவக்கி வைத்தனர்.
இந்த அகில இந்திய கிரிக்கெட் போட்டியில் அலகாபாத், ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் ஹரியானா கேரளா, மெட்ராஸ், ஒடிசா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சென்னை வழக்கறிஞர்கள் கிரிக்கெட் சங்க தலைவர் எம்.வேல்முருகன் மற்றும் செயலாளர் ஆர்.முரளி ஆகியோர் மேற்கொண்டனர். இந்த கிரிக்கெட் போட்டிகள் சென்னை ஐஐடி விளையாட்டு மைதானம், ஏ.எம்.ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானம், பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இறுதி போட்டி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணிக்கும், அலகாபாத் உயர்நீதிமன்ற அணிக்கும் நடைபெற்றது. 20 ஓவர் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றிபெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பரிசு கோப்பையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதன்மை அதிகாரி காசிவிஸ்வநாதன், தொழிலதிபர் ஜெயமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
The post வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி; சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றி appeared first on Dinakaran.