சேலம்: சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையை சரிவர மேற்கொள்ளாத பெண் எஸ்ஐ, 3 சிறப்பு எஸ்ஐக்கள் உள்பட 10 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி கௌதம்கோயல் அதிரடி உத்தரவிட்டார். பொங்கல் பண்டிகை முடிந்து நகரப்பகுதிக்கு மக்கள் திரும்பும் நிலையில், குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்க நேற்று தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனையை அதிகளவு நடத்த டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டத்தில் சேலம் ரூரல், ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி, ஆத்தூர் ஆகிய 6 உட்கோட்டங்களிலும் அந்தந்த டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் வாகன சோதனையை தீவிரமாக மேற்கொள்ள எஸ்பி கௌதம்கோயல் உத்தரவிட்டார். இதன்பேரில் நேற்று மதியம் 1 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையில் தொடர்ந்து முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன சோதனையை போலீசார் நடத்தினர். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் 5க்கும் மேற்பட்ட இடங்கள் என ஒட்டுமொத்தமாக 100க்கும் அதிகமான இடங்களில் இச்சோதனையை போலீசார் நடத்தினர். அதில், டூவீலர், கார்களை நிறுத்தி ஏதேனும் ஆயுதங்கள் இருக்கிறதா?, பல வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளாக இருக்கிறார்களா?, என்ற கோணத்தில் விசாரித்து சோதனையிட்டனர்.
இந்த வாகன சோதனையை போலீசார் சரிவர மேற்கொள்கிறார்களா? என எஸ்பி கௌதம்கோயல் ஆய்வு செய்தார். அதில், சரிவர வாகன சோதனையை மேற்கொள்ளாத மகுடஞ்சாவடி எஸ்ஐ ஜீவிதா, ஆத்தூர் ரூரல், வீரகனூர், நங்கவள்ளியை சேர்ந்த 3 சிறப்பு எஸ்ஐக்கள், 6 ஏட்டுகள் என 10 பேரை அதிரடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி உத்தரவிட்டார்.
The post வாகன சோதனையை சரிவர மேற்கொள்ளாத பெண் எஸ்ஐ, 3 சிறப்பு எஸ்ஐ உள்பட 10 பேர் ஆயுதப்படைக்கு தூக்கியடிப்பு appeared first on Dinakaran.