மதுரை: “இடைத்தேர்தல் என்றால் 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம் என வாக்கு வாங்குவதற்கு பணம் கொடுக்கும் திமுக அரசு, பொங்கல் பண்டிகைக்கு ஏழை, எளிய மக்கள் மற்றும் சமீபத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்க ரூ.3 ஆயிரமாவது கொடுக்க வேண்டும்,” என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மதுரையில் இன்று (ஜன.4) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை முதல் கன்னியாகுமரி வரை 10 மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவத்தில் தமிழக அரசு உண்மையை மூடி மறைக்க நினைத்தால் அது மக்களுக்கு செய்யக்கூடிய அநீதியாகும். ஜனநாயக முறையை கடைபிடித்து நியாயம் கேட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு அனுமதி கொடுப்பது அரசின் கடமை.