சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 13 முதல் மார்ச் 18 வரையிலான 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் 16 செ.மீ மழை பதிவானது. பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலிருந்து தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.