சென்னை: வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வை சென்னையில் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் தங்கள் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு.
அதன்படி 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து வரும் அரிய நிகழ்வானது தற்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்பட்டு வருகின்றன. இவற்றை காண்பதற்காக அறிவியல் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் ஜன.25-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.