சென்னை: ‘வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளுக்கு வாரம் 5 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய நிதித் துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதித் துறை செயலாளர் நாகராஜுக்கு அனுப்பி உள்ள கடிதத்தின் விவரம்: நாட்டின் நிதி கட்டமைப்புக்கு முதுகெலும்பாக வங்கிகள் திகழ்கின்றன. அத்துடன், அரசின் நலஉதவித் திட்டங்களை செயல்படுத்துதல், நிதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் உதவுகின்றன. ஆனால், வங்கிகளில் ஊழியர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு மற்றும் ஊழியர்களை தேர்வு செய்யாது உள்ளிட்ட காரணங்களால், பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.