ஏற்காடு: வார விடுமுறையையொட்டி, சேலம் மாவட்டம் மேட்டூர், ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அவர்கள் படகு சவாரி செய்தும், இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தும் பொழுதை கழித்தனர். வார விடுமுறை தினமான இன்று (ஞாயிறு), சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாகவும், நண்பர்களாகவும் வாகனம் மூலம் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். இதனால் அங்குள்ள தங்கும் விடுதிகள் நிரம்பின.
பயணிகள் ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்து செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பயணிகள் வருகை அதிகரிப்பால், சாலையோர கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகையால், ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல், மேட்டூர் அணை பூங்காவிற்கு இன்று சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனர். பின்னர் அணைபூங்காவிற்கு சென்று ஊஞ்சலாடியும், சறுக்கியும் விளையாடினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை, முயல் பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றை கண்டு மகிழ்ந்து பொழுதை கழித்தனர். அணை வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.
The post வார விடுமுறையையொட்டி ஏற்காடு, மேட்டூருக்கு பயணிகள் படையெடுப்பு: படகு சவாரி செய்து உற்சாகம் appeared first on Dinakaran.