சென்னை: விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்.
இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். கடந்த 2024ம் ஆண்டு குரூப் 4 பதவியில் 9491 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பித்தனர். அதே போல இந்தாண்டு நிரப்பப்பட உள்ள தேர்வுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, இணையவழியில் பெறப்பட்ட மற்றும் இணையவழியில் பெறப்படாத வகுப்புச் சான்றிதழ் ஆகிய இரண்டையும் கொண்டுள்ள தேர்வர்கள், சான்றிதழ் எண்ணை உள்ளீடு செய்வது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு டிஎன்பிஎஸ்சி, ‘‘இணையவழியில் பெறப்பட்ட மற்றும் இணையவழியில் பெறப்படாத வகுப்புச் சான்றிதழ் ஆகிய இரண்டையும் கொண்டுள்ள தேர்வர்கள், விண்ணப்பிக்கும் போது, இணையவழியில் பெறப்பட்ட சான்றிதழ் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்’’ என்று விளக்கம் அளித்துள்ளது.
The post விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் appeared first on Dinakaran.