விகேபுரம்: விகேபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பாபநாசம் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாபநாசம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் 12 உறைகிணறுகள் உள்ளன. இந்த உறைகிணறுகள் மூலம் விகேபுரம் நகராட்சியில் ஒரு வார்டு மற்றும் சிவந்திபுரம், அடையகருங்குளம் ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது அறுவடை காலம் முடிந்து விட்டதால், பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தினமும் 50 கன அடி தண்ணீர் மட்டுமே தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பாபநாசம், சிவந்திபுரம் புலவன்பட்டி, ஆலடியூர் ஆகிய ஆற்றுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12 உறைகிணறுகளுக்கு தண்ணீர் வரத்து அடியோடு நின்றது.
உறைகிணறுகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரும் சிவந்திபுரம் மற்றும் அடையக் கருங்குளம் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. சில இடங்களில் ஊராட்சிகள் மூலம் உறைகிணறுகளுக்கு தண்ணீர் வருவதற்காக ஜேசிபி மூலம் ஆற்றில் மணலை தோண்டி வழிமுறைகளை கையாண்டு ஊராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கி வந்தனர்.
இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 17ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது பாபநாசம் அணையில் இருந்து 50 கன அடியில் இருந்து 500 கனஅடியாக குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் குடிநீர் தேவை பூர்த்தி ஆகி உள்ளதால் விகேபுரம் நகராட்சி மற்றும் சிவந்திபுரம், அடையகருங்குளம் ஊராட்சி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post விகேபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பாபநாசம் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.