விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். ேமலும் சார் பதிவாளரை வாகனத்தில் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பண பரிமாற்றம் அதிகளவு நடைபெறுவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முகூர்த்த நாளான நேற்று காலை முதல் பத்திரப்பதிவு மும்முரமாக நடைபெற்று வந்தது.
மாலை அலுவலகம் அருகே மறைமுகமாக நோட்டமிட்டிருந்த விழுப்புரம் (பொறுப்பு) லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் 2 ஜீப்களில் மாலை 5 மணி அளவில் திடீரென சார் பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தனர். இதையடுத்து அலுவலகத்தில் இருந்த பொதுமக்களை வெளியே அனுப்பிவிட்டு சார் பதிவாளர் சூர்யா மற்றும் அலுவலக ஊழியர்களை மட்டும் அலுவலகத்தில் வைத்து அலுவலக கதவுகளை மூடினர். பின்னர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. மேலும் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 120ஐ பறிமுதல் செய்தனர். இரவு 10 மணி வரை இந்த சோதனை நடந்தது. மேலும் சார் பதிவாளர் சூர்யாவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தங்கள் வாகனத்தில் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். கடந்தாண்டு செப்டம்பர் 14ம் தேதி இதே தலைமையை கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.94,570 மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
The post விக்கிரவாண்டி சார் பதிவாளர் ஆபீசில் ரெய்டு: ரூ.2.14 லட்சம் பணம் பறிமுதல் சார் பதிவாளரிடம் விசாரணை appeared first on Dinakaran.