புதுடெல்லி: வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் தனிப்பட்ட தொடர்பு விவரங்களை ஆன்லைனில் பகிர்ந்த ட்ரோலர்களை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜய கிஷோர் ரஹத்கர் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் குடும்பத்தினரைக் குறிவைத்து நடத்தப்படும் ஆன்லைன் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரின் மகளுடைய தனிப்பட்ட தொடர்பு விவரங்களை பகிரங்கமாக பகிர்ந்தது பொறுப்பற்ற மோசமான செயலாகும். இது தனிநபர் உரிமை மீறலாகும். இத்தகைய செயல்கள் அவரது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகக் கூட அமையலாம். குடிமைப் பணி அதிகாரிகளின் குடும்பத்தினர் மீதான இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்கள் ஏற்பதற்கில்லை. மேலும் இவை ஒழுக்கநெறியற்ற செயல். ஒவ்வொருவரும் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டுகிறோம். சுய கட்டுப்பாடு தேவை.” என்று குறிப்பிட்டுள்ளார்.