சென்னை: சென்னையைச் சேர்ந்த மரியா சுமல்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது தாயின் 11ம் நாள் காரியத்தில் கலந்து கொள்ளவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் புழல் சிறையில் உள்ள தனது தந்தைக்கு 11 நாட்கள் அவசர விடுப்பு வழங்கக்கோரிசிறை நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டது. அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, தந்தைக்கு விடுப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, 6 நாட்கள் அவசரகால விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரினார். இதைக் கேட்ட நீதிபதிகள், மூன்று நாட்கள் விடுப்பு வழங்கப்படுகிறது. ரத்த சொந்தம் என்று யாராவது மரணமடைந்தால் விசாரணைக் கைதிகளுக்கு சிறை நிர்வாகமே அவசர விடுப்பு வழங்குவது போல 11ம் நாள் காரியத்திற்கும் சிறை நிர்வாகமே விடுப்பு வழங்கலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் இது போன்ற வழக்குகளை தவிர்க்கலாம். இதை சிறை நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
The post விசாரணை கைதிகளின் உறவினர் இறப்புக்கு விடுப்பு தருவதுபோல் 11ம் நாள் காரிய நிகழ்ச்சிக்கும் விடுப்பு தர முடிவு எடுக்கலாம்: சிறை நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.