மதுரை: மதுரை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்ற அக்கட்சியின் கொடியேற்று விழா விவகாரத்தில் 3 வருவாய்த் துறை ஊழியர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய கோரியும், அரசியல் கட்சிகள் மோதலுக்கு கடைநிலை ஊழியர்களை தொடர்ந்து பலிகடாவாக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்களுக்கு ‘பூட்டு’ப் போட்டு 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
மதுரை புதூரில் கடந்த செப்டம்பரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கொடியெற்றுவதற்காக புதிதாக அக்கட்சியின் 62 அடி கொடிக்கம்பம் நடப்பட்டது. அனுமதியின்றி நடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவால் காவல் துறையினர் இரவோடு இரவாக கொடிக்கம்பத்தை அகற்றினா். அதிருப்தியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மதுரை – அழகர் கோயில் சாலையில் மறியல் செய்தனர்.