இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களின் தீவிர காத்திருப்புக்குப் பிறகு ஒருவழியாக வெளியாகியுள்ளது ‘விடாமுயற்சி’ திரைப்படம். ட்ரெய்லர், பாடல்கள் பெரிதாக ஹைப் எதுவும் ஏற்றவில்லை என்றாலும், அஜித் என்ற நடிகருக்காக பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் அதற்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம்.
அஜர்பைஜான் நாட்டில் காதல் திருமணம் கொண்ட அர்ஜுன் (அஜித்) – கயல் (த்ரிஷா) தம்பதியின் வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விரிசல் ஏற்படுகிறது. இருவரும் பிரிந்துவிடுவதாக முடிவெடுத்த தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக காரில் அழைத்துச் செல்கிறார் அர்ஜுன். செல்லும் வழியில் ஓரிடத்தில் கார் பிரேக்டவுன் ஆகிறது. அந்த வழியாக ஒரு டெலிவரி டிரக்கில் வரும் ரக்‌ஷித் (அர்ஜுன்), தீபிகா (ரெஜினா) தம்பதி, அவர்களுக்கு உதவும் பொருட்டு த்ரிஷாவை அழைத்துச் சென்று பக்கத்தில் இருக்கும் ஒரு கஃபேயில் இறக்கிவிடுவதாக உறுதி அளிக்கின்றனர். கார் சரியானதும் அந்த கஃபேவுக்கு செல்லும் அர்ஜுன், அங்கு தனது மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறார். பல இடங்களில் தேடி அலைகிறார். இந்த தேடும் படலத்தில் பல முடிச்சுகள் அவர் முன்னால் அவிழ்கின்றன. மனைவியை அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதே ‘விடாமுயற்சி’யின் திரைக்கதை.