சென்னை: விமானங்கள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடும் சமூக விரோத கும்பல்களுக்கு இனிமேல் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக, சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமான சேவைகள் பெரும் அளவு பாதிக்கப்படுகின்றன. பயணிகள் மிகுந்த அச்சம் அடைகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் விமான பாதுகாப்பு துறை, இதுபோன்ற வெடிகுண்டு புரளிகளை கிளப்பி விடும் சமூக விரோதிகள், சமூக விரோத கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று, இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம், டிசம்பர் 16ம் தேதி அரசிதழில், அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏற்கனவே விமான பாதுகாப்பு சட்டம் 2023ல் கூடுதலாக 30கி என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது 29கி என்ற மற்றொரு புதிய சட்ட விதிகளையும் அமல்படுத்தி உள்ளது. இந்த புதிய சட்ட விதிகளின்படி, இனிமேல் வெடிகுண்டு புரளிகளை கிளப்பி விடும் சமூக விரோதிகளை கண்டுபிடித்து கைது செய்து ரூ. 1 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.75 லட்சம், ரூ. 1 கோடி என்று குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப, அதிகபட்ச அபராதங் கள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் எந்த ஒரு தனி நபரையோ அல்லது ஒரு குழுவையோ விமானத்திலிருந்து கீழே இறக்கி விட்டு, அவர்கள் விமான பயணத்திற்கு தடை விதிக்கவும், சில குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் விமானப்பயணம் மேற்கொள்ள தடை விதிக்கவும் இந்த புதிய சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
The post விமானங்கள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்: புதிய அரசாணையை வெளியிட்டது விமான போக்குவரத்து துறை appeared first on Dinakaran.