சென்னை: தமிழக உணவு பாரம்பரியத்தில் சாம்பாருக்கு முக்கிய இடம் உள்ளது. அதிலும் முருங்கைக்காய் சாம்பாருக்கு முக்கியத்துவம் அதிகம். பச்சிளம் குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை முருங்கை நீக்குகிறது. கோவை அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள தகவல் தொகுப்பில், 100 கிராம் முருங்கைக் காயில் கால்சியம் 30 மில்லி கிராம், மக்னீசியம் 24 மி.கி. ஆக்சாலிக் அமிலம் 101 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. பொட்டாசியம் 259 மி.கி, கந்தகம் 137 மி.கி. வைட்டமின் பி-கோலின் 423 மி.கி. வைட்டமின் சி 120 மி.கி. இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக முருங்கைக் காயின் விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் செப்டம்பர் மாதத்தில் கிலோ ரூ.10 ஆக விலை வீழ்ச்சி அடைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மொத்த விலையில் ரூ.100 முதல் ரூ.300 வரையிலும், சில் லறை விற்பனையில் ரூ.250 முதல் ரூ.400 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.