தமிழகத்தின் முதல்வராக காமராஜர் தேர்வு, மகாத்மா காந்தியின் இலங்கைப் பயணம் குறித்து அடுத்து பார்ப்போம் என்று கடந்த 4-வது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு முன்னதாக சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இன்றைக்கும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1956-ம் ஆண்டில் எங்கள் பகுதியில் பெரும் மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளங்கள் மளமளவென்று நிரம்பின. கழிங்கல், பெரிய மதகுகளை எல்லாம் திறந்து விட்டபிறகும் கரைகளில் மண் அரிக்கப்பட்டு சேதமடைந்தன. உடனடியாக கிராம மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து துரிதமாகச் செயல்பட்டு 2 – 3 மணி நேரத்தில் சீர்படுத்தினோம். அப்படியொரு ஒற்றுமை கிராமங்களில் இருந்தது. அவசர காலங்களில் அரசு அதிகாரிகள், பொறியாளர்களை எல்லாம் தொடர்பு கொள்வதற்கு அன்றைக்கு தொலைபேசி வசதி கிடையாது.