பெரம்பூர்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்தில்லா சாலை பயணத்தை மேற்கொள்ளவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளை ஒன்வே, அதாவது ஒருவழிப்பாதைகளாக மாற்றி போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் மேம்பால பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் அந்த இடங்களிலும் ஒருவழிப்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வருகிறது.
வடசென்னையில் இருந்து பெரும்பாலான வாகனங்கள் வெளியேறுவதற்கு பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம், வியாசர்பாடி ஜீவா சுரங்கப்பாதை மற்றும் வியாசர்பாடி கணேசபுரம் சப்வே ஆகிய வழிகளில் வடசென்னையில் இருந்து வெளியேறும் வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன. இதில் பல ஆண்டுகளுக்கு முன்பு முரசொலி மாறன் மேம்பாலம் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டு அந்த வழியாக வாகனங்கள் செல்கின்றன. இதனால் பெரம்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் எளிதில் வாகனங்கள் மற்ற இடங்களுக்கு செல்ல முடிகிறது. மற்றொரு இடமான வியாசர்பாடி ஜீவா பகுதியில் தற்போது மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியான வியாசர்பாடி சுந்தரம் சப்வே வழியாக பெரும்பாலான வாகனங்கள் வெளியே வருகின்றன. இந்த பகுதியில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டாலும் தினமும் காலையில் பீக் அவர் எனப்படும் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வடசென்னையில் இருந்து வெளியேறும் வாகனங்கள் சுந்தரம் மேம்பாலம் வழியாக பேசின் பிரிட்ஜ் வந்து மூலக்கொத்தளம் பகுதியில் புளியந்தோப்பு வழியாக செல்வதற்கு யூ டர்ன் எடுக்க வேண்டும்.
இந்த பகுதியில் சிறிய வாகனங்களான இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ, கார் மட்டுமே யூ டர்ன் செய்வதற்கு வசதி உள்ளது. மற்ற வாகனங்கள் மின்ட் பகுதிக்கு சென்று யூ டர்ன் அடித்துக்கொண்டு வரவேண்டும். இதனால் காலை வேளையில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலம் வழியாக பேசின் பிரிட்ஜ் நோக்கி வரும்போது வலதுபுறமாக பேசின் பவர்ஹவுஸ் சாலை செல்வதற்கு பல ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்டாக்ஸ் மேம்பாலப் பணிகள் நடந்த காரணத்தால் இந்த பகுதியில் வலது பக்கமாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதம் வால்டாக்ஸ் ரோடு மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது அந்த பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே வியாசர்பாடியில் இருந்து வரும் வாகனங்கள் புளியந்தோப்பு செல்வதற்கு பேசின் பவர் ஹவுஸ் சாலை வழியாக செல்ல அனுமதித்தால் காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து போலீசார் பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை வேளையில் வியாசர்பாடியில் இருந்து வரும் வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் ஏறி வலது பக்கமாக செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைந்து தேவையில்லாமல் வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் சென்று திரும்பி வரும் நிலை குறையும். எனவே இதுகுறித்து போக்குவரத்து உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் கள ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
The post வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் பகுதியில் காலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல்: மீண்டும் பழைய முறை அமல்படுத்தப்படுமா? appeared first on Dinakaran.