ஐபிஎல் வரலாற்றில் 17 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அணிகளுள் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரும் (ஆர்சிபி) ஒன்று. நட்சத்திர பட்டாளங்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள் படை என ஒவ்வொரு சீசனிலும் குதூகலமாக அந்த அணி களம் கண்ட போதிலும் சாம்பியன் கோப்பையை வெல்வது என்பது அந்த அணிக்கு கானல் நீராகவே உள்ளது. எனினும் இம்முறை 18-வது சீசனில் புத்தெழுச்சியுடன் களமிறங்குகிறது ஆர்சிபி. புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி அணியும் சீருடையின் எண் 18, இந்த சீசனும் 18. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் போட்டி தொடங்குவதற்கு முன்னரே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘இ சாலா கப் நம்தே’ என்ற வாசகத்தை கடந்த சில சீசன்களில் முன்னிலைப்படுத்திய ஆர்சிபி இம்முறை அதை அடைவதற்காக கூடுதல் உத்வேகத்துடன் செயல்படக்கூடும். ரஜத் பட்டிதார் தலைமையின் கீழ் மெகா ஏலத்தின் போது அணிக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது.