“விராட் கோலி கூடுதலாக முயற்சி எடுத்து ஆடுகிறார். எனவேதான் அவரால் ஃபார்மை மீட்டெடுக்க முடியவில்லை” என்று இந்திய முன்னாள் கேப்டனும், கோலியினால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
2023 உலகக் கோப்பையில் அபாரமாக ஆடிய பிறகே விராட் கோலி 6 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வெறும் 137 ரன்களையே எடுத்துள்ளார். இதில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 38 பந்துகளில் வலி நிறைந்த 22 ரன்களை எடுத்து விட்டு ரிஷாத் ஹுசைன் என்ற லெக் ஸ்பின்னரின் ஃபுல் லெந்த் பந்தை பின் காலில் சென்று ஆடி லேட் கட்டில் பாயின்ட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விராட் கோலி கடந்த 6 இன்னிங்ஸ்களில் 6 முறையும் ஸ்பின்னரிடம் ஆட்டமிழந்துள்ளார். அதுவும் 5 முறை லெக் ஸ்பின்னரிடம்.