* ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
* காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு
விருதுநகர்: விருதுநகர் பேட்டை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தகர, குடிசை வீடுகள் என 20க்கும் மேற்பட்ட வீடுகள், அவைகளில் இருந்து ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விருதுநகர் சிவன்கோயில் பகுதியில், பெருமாள் கோயில் தெரு பேட்டை உள்ளது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடிசை மற்றும் தகர வீடுகள் உள்ளன. இவைகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். இந்நிலையில், பேட்டை பகுதியில் உள்ள ராஜா என்பவரது குடிசை வீட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பற்றியது.
காற்றின் வேகத்தில் மளமளவென பரவிய தீ, அக்கம்பக்கத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளில் பற்றி எரிந்தது. தீப்பிடிக்கத் தொடங்கியவுடன் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர். மேலும், வீடுகளில் இருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. வீடுகளின் அருகில் இருந்த பால்பண்ணை ஒன்றிலும் தீ பரவியது. இதையடுத்து அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட மாடுகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன. இது குறித்து தகவலறிந்த விருதுநகர் தீயணைப்புத்துறை வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர், 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள், அவைகளில் இருந்த ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இது குறித்து விருதுநகர் பஜார் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, ‘மின்கசிவால் தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர். விருதுநகரில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post விருதுநகரில் பயங்கர தீ: 20 வீடுகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.