*74 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தல்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.64 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 74 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன.
சிவகாசி கல்வி மாவட்டத்தில் 5,778 மாணவர்கள், 6,721 மாணவியர் என மொத்தம் 12,499 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 5,538 மாணவர்கள், 6,595 மாணவியர் என 12,133 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 95.85 சதவீதம், மாணவியர் 98.13 சதவீதம் என மொத்தம் 97.07 சத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 4,314 மாணவர்கள், 4,965 மாணவியர் என 9,279 பேர் தேர்வு எழுதினர். இதில் 4,075 மாணவர்கள், 4,838 மாணவியர் என 8,913 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 94,46 சதவீதம், மாணவியர் 97.44 சதவீதம் என மொத்தம் 96.06 சத தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாவட்டத்தில் 221 பள்ளிகளை சேர்ந்த 10,092 மாணவர்கள், 11,686 மாணவியர் என 21,778 பேர் தேர்வெழுதினர். இவர்களில் 9,613 மாணவர்கள், 11,433 மாணவியர் என 21,046 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் 95.25 சதம், மாணவியர் 97.84 சதம் என மொத்தம் 96.64 சத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 7வது இடத்தில் உள்ளது.97 அரசுப்பள்ளிகளில் 13 பள்ளிகள், 67 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 19 பள்ளிகள், 55 மெட்ரிக் பள்ளிகளில் 42 பள்ளிகள் என மாவட்டத்தில் 221 பள்ளிகளில் 74 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
மாவட்ட அளவில் தமிழ் பாடத்தில் 1 மாணவி, ஆங்கிலத்தில் 1 மாணவன், இயற்பியல் பாடத்தில் 8 மாணவர்கள், வேதியியல் பாடத்தில் 22, கணித பாடத்தில் 43 பேர், கணினி அறிவியல் 251, உயிரியல் 1, தாவரவியல் 17 பேர், விலங்கியல் 2 பேர், பொருளியல் 19 பேர், வணிகவியல் 55 பேர், கணக்குப் பதிவியல் 51 பேர், புவியியல் 1 மாணவர், வணிக கணிதம் 12 பேர், கணினி பயன்பாடு 106 பேர், அலுவலக மேலாண்மை பாடத்தில் 1 மாணவர், பிரெஞ்ச் பாடத்தில் 2 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
7வது இடத்திற்கு சென்ற விருதுநகர் மாவட்டம்
பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் கடந்த 1985ல் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவானது. 1985 முதல் விருதுநகர் மாவட்டம் பிளஸ் 2 தேர்ச்சியில் மாநிலத்தில் முதலிடத்தை 2012-13ம் ஆண்டு வரை 27 ஆண்டுகள் தொடர்ச்சியாக தக்க வைத்திருந்தது. 2013-14ல் முதலிடத்தை தவறவிட்டு 3ம் இடத்திற்கு சென்றது.
2014-15ல் மீண்டும் முதலிடம், 2015-16ல் முதலிடத்திலிருந்து 3ம் இடம். 2016-17, 2017-18ல் முதலிடம், 2018-19ல் 7வது இடம், 2019-20ல் 4ம் இடம், 2020-21ல் கொரோனாவால் ஆல் பாஸ், 2021-22ல் 2ம் இடம், 2022-23ல் மீண்டும் முதலிடம், 2023-24ல் 5வது இடம், 2024-25ல் 7வது இடத்திற்கு சென்றுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் கூறுகையில், ‘‘விருதுநகர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 96.64 சதவீத தேர்ச்சியுடன் 7 வது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதமும் 96.64 சதமாக இருந்தது. நடப்பு ஆண்டிலும் அதே சதவீதம் பெற்றிருந்தாலும், மாநில அளவில் பின்னடைவாக இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையிலான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.
பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. பின்னடைவு குறித்து பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதத்தை பரிசீலனை செய்ய இருக்கிறோம். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. பின்னடைவு காரணங்களையும், அதை சரிசெய்வதற்கு அந்தந்த பள்ளி ஆசிரியர்களை கொண்டு ஆய்வு செய்யப்படும். வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றார்.
The post விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 96.64 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி appeared first on Dinakaran.